உத்தமபாளையம் வீதிகளில் குழாய் பதிக்க மீண்டும், மீண்டும் தோண்டும் அவலம் தெருவை பயன்படுத்த முடியாமல் மக்கள் சிரமம்
உத்தமபாளையம்: உத்தமபாளையம் ரத வீதிகளில் மீண்டும் மீண்டும் பள்ளம் தோண்டுவதால் பொதுமக்கள் வீதிகளை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.உத்தமபாளையம் பேரூராட்சியில் 'ஜல்ஜீவன்' பணிகள் துவங்கி 2வது ஆண்டை நெருங்குகிறது. இதுவரை உருப்படியாக எந்த பணியும் நடைபெற வில்லை. ரத வீதிகளில் பகிர்மான குழாய் பதிக்க ரோட்டை தோண்டினார்கள். குழாய் பதித்த பின் அந்த ரோட்டை முறையாக சமப்படுத்த வில்லை. இதனால் பள்ளி பஸ்கள், இதர வாகனங்கள் செல்ல முடியவில்லை. இப்போது தான் ஒரு வழியாக சரியானது . தற்போது மீண்டும் அதே வீதிகளில் பள்ளம் தோண்ட ஆரம்பித்துள்ளனர்.இது எதற்கு என கேட்டதற்கு, மெயின் பகிர்மான குழாய் பதிக்க என்றனர். அது மட்டுமல்லாமல் இது முடிந்த பின் மீண்டும் ஒரு முறை தோண்டுவோம் என்கின்றனர். திட்டமிடாமல் ரோட்டை அடுத்தடுத்து தோண்டுவதால் பயன்படுத்த முடியாத நிலை மாறியுள்ளது. ஒரே சமயத்தில் ரோட்டை தோண்டி பதிக்க வேண்டிய குழாய்களை பதிப்பதை விட்டு விட்டு, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தோண்டி ,வீதிகளை சின்னாபின்னமாக்கி வருகின்றனர்.செயல் அலுவலர் இதுபற்றி கண்டு கொள்வது இல்லை. வளர்ச்சி பணிகள் நடைபெறும் இடங்களில் அதிகாரிகள் பார்வையிட வேண்டும் என்ற நடைமுறை உத்தமபாளையம் பேரூராட்சியில் பின்பற்றுவது இல்லை. இப் பணியால் பொதுமக்கள் வீதிகளில் நடக்க முடியாமல் புலம்பி வருகின்றனர்.