| ADDED : நவ 26, 2025 03:57 AM
பெரியகுளம்: ''எட்டிதொடும் உயரத்தில் உயரழுத்த மின்கம்பி, பாதாளச்சாக்கடை மேன்ஹோலிருந்து வெளியேறும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு, தெருக்களில் பெயர்ந்துள்ள பேவர் பிளாக் கற்களால் போக்குவரத்துக்கு சிரமம்,'' என பல்வேறு அடிப்படை வசதி குறைபாடுகளால் பெரியகுளம் நகராட்சி 13வது வார்டு மக்கள் சிரமப்படுகின்றனர். பெரியகுளம் நகராட்சி 13 வது வார்டு செயின்ட் சேவியர் தெரு, செபஸ்தியார் தேவாலயம் தெரு, அம்பேத்கர் நகர், மேல்மங்கலம் ரோடு ஆகிய பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். அம்பேத்கர் நகர் விளையாட்டு மைதானம் ரோட்டில் மழை காலங்களில் பாதாளச்சாக்கடை மேன்ஹோல் வழியாக வெளியேறும் கழிவுநீர் தேங்கி, சுகாதாரக்கேடுடன் கொசுக்கடியிலும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மாயகிருஷ்ணன், குணசேகரன், கபில்தேவ், ஜெயபால் ஆகியோர் கூறியதாவது: செயின்ட் சேவியர் தெரு மெயின் ரோட்டில் இரு மின்கம்பங்களின் அடிப்பகுதி வலுவிழந்து உயரழுத்த மின் கம்பிகள் எட்டித்தொடும் துாரத்திற்கு கீழே இறங்கி வருகிறது. மின்வாரிய குறைதீர் கூட்டத்தில் பல முறை மனுக்கள் கொடுத்தும், ஒரு முறை கூட உதவி பொறியாளர் பார்வையிடவில்லை. தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், பலமாக காற்று வீசினாலே மின்கம்பிகள் அறுந்து விழும் நிலையில் உள்ளது. ஏதாவது அசம்பாவிதம் நடப்பதற்குள் சீரமைக்க வேண்டும். பாம்புகள் தாராளம் நகராட்சி குடியிருப்பு வளாகம், நகராட்சி திருமணம் மண்டபம் அருகே உள்ளது. இதன் பின்புறம் செயின்ட் சேவியர் தெருவில் முடிகிறது. கட்டங்கள் பராமரிப்பு இல்லை. இரவில் சமூக விரோத செயல்களுக்கு பஞ்சமில்லை. வளாகத்தில் களைச்செடிகள் அதிகம் வளர்ந்துள்ளதால் பாம்புகள் நடமாட்டம் அதிகம் உள்ளன. அங்கிருந்து இரவில் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்கு பாம்புகள் வருகிறது. இதனால் வார்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். குடியிருப்பு வளாகத்தில் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடக்கும் பாழடைந்த கட்டடங்களை இடித்து விட்டு, காம்பவுண்ட் சுற்றுச்சுவரை உயர்த்தி கட்ட வேண்டும். செபஸ்தியார் தேவாலயம் தெருவில் புதிதாக பேவர் பிளாக் கற்கள் பதிக்க பழைய கற்களை அகற்றி பல நாட்களாகியும் கற்கள் பதிக்கவில்லை. இதனால் இந்தப்பகுதியில் சிறுவர்கள், முதியோர் , கர்ப்பிணிகள் நடந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர். மேம்படுத்தப்பட்ட பூங்கா அவசியம் இப்பகுதியில் நகராட்சியால் கட்டப்பட்ட பூங்காவிற்கு காவலாளி இல்லாததால் இரவில் சிலர் அத்துமீறி நுழைந்து சிறுவர்கள் விளையாடும் உபகரணங்களை உடைத்து சேதப்படுத்தினர். பூங்காவில் வலதுபுறம் உள்ள காலி இடத்தில் கபடி விளையாட 'மேட்' அமைத்து தர வேண்டும். இங்குள்ள இளைஞர்கள் பலர் போலீஸ், ராணுவம், கப்பற்படை, விமானப்படை, உடற்கல்வி ஆசிரியர் உட்பட பல்வேறு மத்திய, மாநில அரசு பணி தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். பூங்காவில் உடற்பயிற்சி கருவிகள் உட்பட உடல்திறனை வலுப்படுத்தும் வசதிகளை மேம்படுத்த வேண்டும். பூங்கா தெருவில் சாக்கடை பாலம் முழுமையாக கட்டப்படாததால் கார் உள்ளிட்ட வாகனங்கள் கடந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர்.