சர்வர் முடங்கியதால் குறைதீர் கூட்டத்தில் மக்கள் அவதி
தேனி: 'சர்வர்' முடங்கியதால் குறைதீர் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து அவதியடைந்தனர்.கலெக்டர் அலுவலகங்களில் திங்கள் தோறும் மக்கள் குறைதீர் முகாம் நடக்கிறது.பல்வேறு துறை தொடர்பான குறைகள், புகார்களுக்கு தீர்வு கிடைக்கும் என்றும் நேரடியாக கலெக்டரிடம் மனுக்கள் வழங்கலாம் என கருதி பொதுமக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வருகின்றனர். நேற்று தேனி கலெக்டர் அலுவலகத்தில் 'சர்வர்' பிரச்னை ஏற்பட்டதால் மதியம் 12:30 மணி வரை 150 மனுக்கள் மட்டும் பதிவு செய்தனர். இதனால் முதியவர்கள், குழந்தைகளுடன் வந்தவர்கள், மாற்றுத்திறனாளிகளை அழைத்து வந்தவர்கள் மனுக்களை பதிவு செய்ய முடியாமல் அவதியடைந்தனர். நீண்ட நேரத்திற்கு பின் நோட்டில் பதிவு செய்து பின் மனுக்கள் வழங்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.கலெக்டர் அலுவல் காரணமாக சென்னை சென்றதால் டி.ஆர்.ஓ., குறை தீர் கூட்டத்தை துவக்கி வைத்து சிறிது நேரத்தில் புறப்பட்டு சென்றார். மாவட்ட அதிகாரிகள் மனுக்களை பெற்றனர். ஆனால் மக்கள் வெளியில் அவதிப்படுவதை அறியாமல் கூட்ட அரங்கில் பல அதிகாரிகள் அலைபேசியிலும், அருகில் உள்ளவர்களிடம் பேச்சிலும் ஆழந்திருந்தனர்.மக்கள் நீண்ட துாரம் பயணித்து கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தால் சில அதிகாரிகள் அலட்சியம் மக்களை வேதனை அடைய வைப்பதாக புலம்பி சென்றனர்.