தேனி திட்டசாலைகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர மக்கள் வலியுறுத்தல்
தேனி: தேனி திட்டசாலைகளை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.தேனி நகர்பகுதியில் பல்வேறு திட்ட சாலைகள் உள்ளன. இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் நகர்பகுதியில் காணப்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஆகும். முக்கியமாக சுப்பன்செட்டிதெரு- அரண்மனைப்புதுார் விலக்கு திட்டசாலை, கோட்டைக்களம்-ரயில்வே ஸ்டேஷன்- கம்பம் ரோடு திட்டசாலை, புது பஸ்ஸ்டாண்ட் கலெக்டர் அலுவலகம்ரோடு- மதுரைரோடு எண்.8 திட்டசாலைகள் முக்கியமானதாகும். திட்டசாலைகளில் உள்ள நில உரிமையாளர்கள் பலர் இடம் தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், திட்ட சாலைகள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது கிடப்பில் போடப்பட்டுள்ளது.மதுரை ரோட்டில் தனியார்பள்ளி, பெட்ரோல் பங்க் இடைப்பட்ட பகுதியில் இருந்து புதுபஸ் ஸ்டாண்ட் கலெக்டர் அலுவலகம் ரோடுவரை உள்ள திட்டசாலை 8 பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி நகரமைப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த திட்டசாலை 550 அடி நீளம், 40 அடி அகலம் கொண்டதாகும். இந்த திட்டசாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால், பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை ரோட்டினை எளிதாக சென்றடைய முடியும். இதனை பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.