அரசு புறம்போக்கில் வசிக்கும் தகுதியான நபர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் பெரியகுளம் நகராட்சி கவுன்சிலர் போராட்டம்
பெரியகுளம்: அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து வரும் தகுதியான நபர்கள் அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும் என பார்வர்டு பிளாக் கவுன்சிலர் போராட்டம் நடத்தினார்.பெரியகுளம் நகராட்சி கூட்டம் தலைவர் சுமிதா (தி.மு.க.,) தலைமையில் நடந்தது. கமிஷனர் தமிஹா சுல்தானா, பொறியாளர் ராஜேஷ் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் பேசியதாவது:மணி வெங்கடேஷ் (அ.ம.மு.க.,): மில்லர் ரோட்டில் பாதாளச்சாக்கடை உடைந்து கழிவுநீர் வெளியேறுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.நாகபாண்டி (பார்வர்டு பிளாக்): 25 வது வார்டில் அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து வரும் 187 குடும்பங்களுக்கு பட்டா வழங்க கோரி டிச.2ல் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தோம். இதில் 115 இடங்களில் நகராட்சி மற்றும் வருவாய்த்துறை சர்வேயர்கள் சர்வே செய்து விட்டு, 72 இடங்களில சர்வே செய்யவில்லை. அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.தலைவர்: நடவடிக்கை எடுக்கப்படும்.மதன்குமார்: (மார்க்சிஸ்ட் கம்யூ.,): அம்பேத்கர் நகர், செயின்ட் சேவியர் தெருவில் சாக்கடை வசதி செய்து தராததால் இரவில் குடியிருப்பு பகுதியில் பாம்பு வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.தலைவர்: விரைவில் சாக்கடை அமைக்கப்படும்.தமிழக அரசு வீட்டுமனை பட்டா வழங்கும் சிறப்பு திட்டம் 2025, அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து வரும் தகுதியான நபர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க, பெரியகுளம் நகராட்சியில் 6 வது வார்டில் 43 பேருக்கும், 2 வது வார்டில் 42 மொத்தம் 85 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்க நகராட்சி ஆட்சேபனை இல்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.