குமுளி பஸ் ஸ்டாண்டிற்கு மங்கலதேவி கண்ணகி பெயர் வைக்க கோரி மனு; -அரசிடம் கொண்டு செல்வதாக எம்.எல்.ஏ., தகவல்
கூடலுார் : குமுளி பஸ் ஸ்டாண்டிற்கு 'மங்கலதேவி கண்ணகி' பெயர் வைக்க அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாக கம்பம் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.தமிழக கேரள எல்லையில் உள்ள குமுளியில் அடிப்படை வசதி இன்றி தமிழக பஸ்கள் ரோட்டிலேயே நிறுத்தி வருகின்றன. குமுளியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க போக்குவரத்து டெப்போ இடம் தேர்வு செய்யப்பட்டது. இப்பகுதியில் சில மாதங்களுக்கு முன் போக்குவரத்து துறை சார்பில் ரூ. 5.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது.இந்நிலையில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கம்பம் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணனிடம் கோரிக்கை மனு வழங்கினர். அந்த மனுவில், 'தமிழக கேரள எல்லையில் மங்கலதேவி கண்ணகி கோயில் கூடலுார் அருகே விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ளது. இக்கோயில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று விழா கொண்டாடப்படும். தமிழக கேரள மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து செல்வார்கள்.இந்த நாட்களில் குமுளிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். எனவே,கண்ணகியின் வரலாற்றை நினைவு கூறும் வகையில் குமுளியில் புதியதாக கட்டப்படும் பஸ் ஸ்டாண்டிற்கு மங்கலதேவி கண்ணகி பெயர் சூட்ட வேண்டும்' என கோரினர்.மங்கலதேவி கண்ணகி கோயிலுக்கு தமிழக வனப்பகுதி வழியாக ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவரும் நிலையில் புதிதாக கட்டப்பட்ட வரும் குமுளி பஸ் ஸ்டாண்டிற்கு மங்கலதேவி கண்ணகி பெயர் வைக்க அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என கம்பம் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.