குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்
தேனி: கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் சண்முகசுந்தரம், கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், கலால் உதவி ஆணையர் முத்துசெல்வி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், உதவித்தொகை, வேலைவாய்ப்பு, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 280 பேர் மனுக்கள் அளித்தனர். ஆண்டிபட்டி தாலுகா மயிலாடும்பாறை கிளியன்சட்டிமலைகுளம் சுற்றி உள்ள விவசாயிகள் இளங்கோ, அய்யாகாளை, மகேந்திரன் உள்ளிட்டோர் வழங்கிய மனுவில், 'தங்கள் பகுதியில் விவசாய நிலங்களில் பலர் குடியிருந்து பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளோம். ரோடு வசதி இல்லை. இதனால் மழைகாலங்களில் பள்ளி செல்லும் மாணவர்கள், வேளாண் விளைபொருட்கள், உரங்கள் கொண்டு செல்ல சிரமம் நிலவுகிறது. தார்சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்,' என கோரியிருந்தனர். ஆர்ப்பாட்டம்கலெக்டர் அலுவலகம் முன் ஐக்கிய கம்யூ., கட்சி சார்பில், மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்ட நிலம் இல்லாதவர்களுக்கு வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட நிர்வாகி கோபால் தலைமை வகித்தார்.