வனத்தினுள் பெண் இறந்த சம்பவம் போலீசார் தீவிர விசாரணை
மூணாறு: பீர்மேடு அருகே வனத்தினுள் பெண் இறந்த சம்பவத்தில் மர்மம் நீடிப்பதால் போலீசார் விசாரணயை தீவிரப்படுத்தினர்.இடுக்கி மாவட்டம் பீர்மேடு அருகே மலைவாழ் மக்கள் வசிக்கும் தோட்டப்புரா பகுதியைச் சேர்ந்த பினு 54, தனது மனைவி சீதா 50, வுடன் ஜூன் 13ல் வன விளை பொருட்களை சேகரிப்பதற்கு வனத்தினுள் சென்றார். அப்போது மீன்முட்டி வனத்தினுள் மனைவியையும், தன்னையும் காட்டு யானை தாக்கியதாக உறவினர்களுக்கு தகவல் அளித்தார். இருவரும் மீட்கப்பட்டு பீர்மேடு தாலுகா மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சீதா இறந்ததாக தெரியவந்தது.அவரது உடல் ஜூன் 14ல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சீதா காட்டு யானை தாக்கி இறக்கவில்லை என தெரியவந்தது. அதனை உறுதி படுத்தும் வகையில் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்திய கோட்டயம் வனத்துறை அதிகாரிகள் யானை நடமாடியதற்கான அறிகுறி எதுவும் இல்லை என கூறினர். அதனை மறுத்த பினு, தனது மனைவி காட்டு யானை தாக்கி இறந்ததாக உறுதியுடன் கூறினார்.இந்நிலையில் பீர்மேடு டி.எஸ்.பி. விஷால்ஜான்சன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர். அதில் சம்பவ இடத்தில் யானை நடமாடியதற்கான அடையாளங்கள் தென்படுவதாக டி.எஸ்.பி. கூறியதால் சீதா மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. அவர் இறந்து ஆறு நாட்கள் ஆகியும் எவ்வாறு இறந்தார் என கண்டு பிடிக்க இயலாமல் வனத்துறையினர், போலீசார் ஆகியோர் குழப்பம் அடைந்துள்ளனர். அதனால் பீர்மேடு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.