கலெக்டர் ஆபீசிற்கு மனு கொடுக்க வந்த முதியவர் டவரில் ஏறி மிரட்டல் போலீஸ் வழக்கு பதிய முடிவு
தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த முதியவர் அபுதாகீர் 65, தனது கைப்பையை காணவில்லை என அருகில் உள்ள டவரில் ஏறி மிரட்டியவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர். உத்தமபாளையம் களிமேட்டுப்பட்டி அபுதாகிர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். அவரது மனுவில், பண்ணைபுரம் கோடாங்கிபட்டியில் வாங்கிய நிலத்தில் சிலர் ஆக்கிரமித்து குடியிருப்பதாகவும், அவர்களுக்கு மின்வாரியம் முறைகேடாக இணைப்பு வழங்கி உள்ளது. அந்த இணைப்புகளை அகற்ற நீதிமன்றம் தீர்ப்பளித்தும் நடவடிக்கை இல்லை. மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார். அவரும், அவருடைய மனைவியும் கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா செய்ய உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்களிடம் போலீசார் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது கொண்டு வந்த தனது கைப்பை காணவில்லை என்றார். சிறிது நேரத்தில் அவர் கருவேல்நாயக்கன்பட்டியல் உள்ள டவரில் ஏறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார், தீயணைப்புத்துறையினர் அவரிடம் பேசினர். அவருடைய மனைவியிடம் தொலைந்த கைப்பை இருப்பதாக தெரிவித்த பின் கீழே இறங்கினார். பின் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். அவர் மீது வழக்கு பதிவு செய்ய உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.