மலைவாழ் மக்கள் வசிக்காத வார்டு அந்த சமூகத்தினருக்கு ஒதுக்கீடு அரசியல் கட்சியினர் குழப்பம்
மூணாறு: மூணாறு ஊராட்சியில் மலைவாழ் மக்கள் ஒருவர் கூட வசிக்காத வார்ட்டை, அந்த சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டதால் அரசியல் கட்சியினர் குழப்பம் அடைந்துள்ளனர். கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதால், வார்டுகள் மறு சீரமைக்கப்பட்டு, அவற்றை குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணிநடந்து வருகின்றன. மூணாறு ஊராட்சியில் வார்டு மறு சீரமைப்புபடி 21ல் இருந்து 20 வார்டுகளாக குறைந்தது. மேலும் வார்டு ஒதுக்கீட்டில் 9ம் வார்டான இக்கா நகர் மலைவாழ் மக்களுக்கு ஒதுக்கப்பட்டது. அந்த வார்டில் 1200க்கும் அதிகமாக வாக்காளர்கள் உள்ள நிலையில் ஒருவர் கூட மலைவாழ் மக்கள் சமூகத்தை சேர்ந்தவர் இல்லை. அதனால் அரசியல் கட்சியினர் குழப்பம் அடைந்ததுள்ளனர். ஊராட்சியில் 2ம் வார்டான லக்கம் பகுதியில் மலைவாழ் மக்கள் ஏராளம் வசிக்கின்றனர். அந்த வார்டு ஆதிதிராவிடர் பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வார்டில் வசிக்கும் மலைவாழ் மக்கள் சமூகத்தை சேர்ந்தவரை, 9ம் வார்டான இக்கா நகரில் போட்டியிட வைப்பதற்கு அரசியல் கட்சியினர் ஆலோசித்து வருகின்றனர். இதனிடையே 9ம் வார்டு மலைவாழ் மக்களுக்கு ஒதுக்கியதை மறுபரிசீலனை செய்யுமாறு காங்கிரஸ் கட்சியினர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனு மீதான விசாரணை அக்.21ல் நடக்க உள்ளது.