| ADDED : பிப் 05, 2024 12:16 AM
தேனி மாவட்டத்தில் பிளாஸ்டிக், கேரி பேக், பிளாஸ்டிக் தட்டுகள், பாலிதீன் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என அரசு தடை விதித்தது. இதனை ஒட்டி போடி, தேனி, கம்பம், சின்னமனுார், கூடலுார் நகராட்சிகள் உட்பட, ஊரக உள்ளாட்சிப் பகுதிகளிலும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் ஊர்வலங்கள், விழிப்புணர்வு பிரசார ஊர்வலங்கள் நடந்தன. மக்கும், மக்காத குப்பை என பிரித்து சேகரிக்க தனித்தனி தொட்டிகள் அமைக்கப்பட்டன. துப்புரவு பணியாளர்களுக்கு தனித்தனி தொட்டிகள் வழங்கப்பட்டன. வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், ரோட்டோர கடை வைத்திருப்பவர்கள் பாலிதீன் பைகளை பயன்படுத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டன.போடி நகராட்சியில் விதிமீறும் நபர்களுக்கு நகராட்சி முன்னாள் கமிஷனர் சரவணகுமார் தலைமையில் ரூ.ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. ஓட்டல்கள், டாஸ்மாக் உள்ளிட்ட கடைகளில் சோதனை நடத்தியதில் ரூ.பல லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் கேரி பைகள், டீ கப், காலாவதியான குடிநீர் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.இதனால் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத வகையில் மாவட்டத்தில் முன்னோடி நகராட்சியாக போடி நகராட்சி செயல்பட்டது. இதுபோல மற்ற நகராட்சிகளும் துரிதமாக செயல்பட்டன. தற்போது நடவடிக்கை எடுக்காமல் நகராட்சி நிர்வாகங்கள் மெத்தனம் காட்டி வருகின்றன. இதனால் பாலிதீன், பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளதோடு, தேவைக்கான விற்பனை அதிகரித்துள்ளதால், உற்பத்தியும் அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பும், மக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நகராட்சிகளில் கடந்த 10 மாதங்களில் சொற்ப அளவிலேயே மஞ்சள் பை வினியோகம் நடந்துள்ளது.பாலிதீன், பிளாஸ்டிக் பயன்பாடுகளை, உற்பத்தியை தடை செய்திட நகராட்சி நிர்வாகங்களுக்கு உத்தரவிடும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.