கூலி உயர்வு கோரி விசைத்தறி நெசவாளர்கள் ஸ்டிரைக் துவக்கம்
ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தில் விசைத்தறி நெசவாளர்கள் புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவக்கி உள்ளனர். பல லட்சம் மதிப்பிலான காட்டன் ரக சேலைகள் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.டி.சுப்புலாபுரத்தில் 2000க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. விசைத்தறி தொழிலில் 4000 மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதி விசைத்தறிகளில் உற்பத்தியாகும் 60, 80ம் நம்பர் காட்டன் ரக சேலைகள் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. விசைத்தறி நெசவாளர்களுக்கான இரு ஆண்டுக்கான கூலி உயர்வு ஒப்பந்தம் டிசம்பர் 31ல் முடிந்தது. புதிய கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியும், புதிய ஒப்பந்தத்திற்கான ஏற்பாடுகள் இல்லை.