மேலும் செய்திகள்
புயல், மழை எதிரொலி காய்கறிகள் விலை உயர்வு
04-Dec-2024
பெரியகுளம்: மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காய்கறி வரத்து குறைந்த நிலையில், முகூர்த்த நாட்கள், கார்த்திகை மாதம் பக்தர்கள் விரதம் இருந்து வருவதால் தேவை அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.மாவட்டத்தில் பெரியகுளம், கூடலூர், ஆண்டிபட்டி, சின்னமனூர், போடி பகுதியில் காய்கறி பயிர்கள் அதிகளம் விளைவிக்கப்படுகின்றன. மலை காய்கறிகளான முட்டைகோஸ், பீட்ரூட், நூக்கல், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் அதிகம் சாகுபடியாகின்றன. பருவம் தவறிய மழையால் தக்காளி உட்பட காய்கறிகள் மகசூல் 50 சதவீத அளவு பாதிக்கப்பட்டுள்ளது. காய்கறிகள் விளைச்சல் காலங்களில் வடகிழக்கு பருவமழையால் காய்கறிகள் அறுவடை பாதிப்படைந்தது. கார்த்திகை மாதத்தில் ஐயப்பபக்தர்கள் ஏராளமானோர் மாலை அணிந்துள்ளனர். இதனால் காய்கறி தேவையும் அதிகரித்துள்ளது. ஆனால் விளைச்சல் பாதித்து வரத்து குறைந்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலை உச்சம் தொட்டுள்ளது.பெரியகுளம் தென்கரை மார்க்கெட்டில் இரு மாதங்களுக்கு முன் ரூ.20க்கு விற்ற ஒரு கிலோ தக்காளி தற்போது ரூ.60 ஆகவும், ரூ.30 க்கு விற்ற கத்தரிக்காய் ரூ.50 ஆகவும், ரூ.40 க்கு விற்ற காரட் ரூ.80 ஆகவும், ரூ. 20க்கு விற்ற வெண்டை ரூ.40 ஆகவும், ரூ. 70 க்கு விற்ற பீன்ஸ் ரூ.100 ஆகவும், ரூ.60 க்கு விற்ற பெல்ட் அவரை ரூ.90 ஆகவும்,ரூ.15 க்கு விற்ற கொத்தவரங்காய் ரூ.40 ஆகவும், ரூ.40 க்கு விற்ற பெரிய வெங்காயம ரூ.70 ஆகவும், ரூ.40க்கு விற்ற கொடைக்கானல் உருளைக்கிழங்கு ரூ.80 ஆகவும், ரூ.30 க்கு விற்ற ஆக்ரா உருளைக்கிழங்கு ரூ.50 ஆகவும், ரூ.50 க்கு விற்ற 10 எண்ணிக்கை கொண்ட முருங்கைக்காய் கட்டு ரூ.300 ஆக விலை அதிகரித்துள்ளது.காய்கறி விலை அதிகரித்துள்ளதாலும், கார்த்திகை மாதத்தில் காதணி விழா, புதுமனை புகுவிழா,திருமண முகூர்த்த நாட்கள் அதிகளவில் உள்ளதால், காய்கறி விலை உயர்வு நடுத்தர மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தி உள்ளது. நடுத்தர குடும்பத்தினர் காய்கறிகள் செலவை குறைத்து வருகின்றனர். மழையால் உற்பத்தி பாதிப்பு
பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் காய்கறித்துறை தலைவர் நாகேஸ்வரி கூறுகையில், 'மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் காய்கறி செடிகள் தண்ணீரில் மூழ்கியதால் வரத்து குறைந்தது. சில இடங்களில் விளைச்சலுக்கு தயாரான காய்கறிகள் அறுவடை பாதிப்பினால் காய்கறிகள் விலை உயர்வுக்கு காரணம்', என்றார்.-
04-Dec-2024