உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஊக்கத்தொகை ஆவின் வழங்காததால் உற்பத்தியாளர்கள் பரிதவிப்பு: 3 மாதங்கள் நிலுவையால் மாடுகள் பராமரிப்பில் சிரமம்

ஊக்கத்தொகை ஆவின் வழங்காததால் உற்பத்தியாளர்கள் பரிதவிப்பு: 3 மாதங்கள் நிலுவையால் மாடுகள் பராமரிப்பில் சிரமம்

தேனி: தேனி ஆவினில் உற்பத்தியாளர்களுக்கு பால் ஊக்கத்தொகை மூன்று மாதங்களாக வழங்காததால் மாடு வளர்ப்போர் பரிதவிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.தேனி மாவட்டத்தில் உள்ள 420 பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கறவை மாடு வளர்ப்போரிடம் இருந்து ஆவின் பால் கொள்முதல் செய்து வருகிறது. தேனி ஆவின் கொரோனா காலகட்டத்தில் தினமும் 1.50 லட்சம் லிட்டர் வரை பால் கொள் முதல் செய்தது. தற்போது நிலை தலைகீழாக மாறி தினமும் 63 ஆயிரம் லிட்டர் மட்டும் கொள்முதல் செய்து வருகிறது.சில மாதங்களுக்கு முன் தனியார் பால் நிறுவனங்கள் லிட்டருக்கு கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்ததால் பல உற்பத்தியாளர்கள் தனியாருக்கு தாவினர். இதனால் ஆவின் பால் உற்பத்தி சரிந்தது. தற்போது ஆவின் நிறுவனம் லிட்டருக்கு ரூ. 33 வழங்குகிறது. 2023 டிசம்பர் முதல் லிட்டருக்கு ரூ. 3 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இதனால் தனியாருக்கு தாவிய பால் உற்பத்தியாளர்கள் பலரும் ஆவினுக்கு பால் வழங்க முன் வருகின்றனர். ஆனால் முழுவதும் கொள்முதல் செய்ய ஆவின் தயங்குகிறது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை கடந்த ஏப்ரல் வரை சரியாக வழங்கப்பட்டது. அதன் பின் வழங்கவில்லை. கடந்த 4 மாதங்களில் 30 நாள் மட்டும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.தற்போது ஆவினில் தினமும் 63 ஆயிரம் லிட்டர் கொள்முதல் செய்யப்படுகிறது. லிட்டருக்கு ரூ. 3 ஊக்கத்தொகை என்றால், தினமும் ரூ.1.89 லட்சமும், மாதம் 56.70 லட்சம் ஊக்க தொகை வழங்க வேண்டும். மூன்று மாதத்திற்கு கணக்கிட்டால் ரூ. 1.7 கோடிக்கு மேல் வழங்க வேண்டிய நிலுவை தொகை உள்ளது. ஆனால், தேனி ஆவினில் போதிய வருவாய் இல்லாததால் ஊக்க தொகை வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.விவசாயிகள் கூறுகையில், தீவன செலவு, பராமரிப்பு செலவு ஆகியவற்றை ஒப்பிடுகையில் ஆவின் கொள்முதல் செய்யும் விலை போதியதாக இல்லை. ஊக்கத்தொகை வழங்குவதும் 3 மாதம் நிலுவையில் உள்ளது. இதனால் தீவனம், பராமரிப்பிற்கு கடன் வாங்கி செலவு செய்யும் நிலை உள்ளது என்றனர்.ஆவின் அதிகாரிகள் கூறுகையில், பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஓரிரு வாரங்களில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி