உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பல கோடி மதிப்பிலான பணிகள் முழுமை பெறாமல் முடக்கம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் மக்கள் பிரதிநிதிகளிடம் சுமூக சூழல் இல்லாததால் பாதிப்பு

பல கோடி மதிப்பிலான பணிகள் முழுமை பெறாமல் முடக்கம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் மக்கள் பிரதிநிதிகளிடம் சுமூக சூழல் இல்லாததால் பாதிப்பு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பேரூராட்சியில் மக்கள் பிரதிநிதிகளிடம் சுமூக சூழ்நிலை இல்லாததால் பல கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் முழுமை பெறாமல் முடங்கி உள்ளன. திட்டத்தின் பயன்கள் மக்களுக்கு விரைந்து கிடைக்க பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆண்டிபட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. தி.மு.க., சார்பில் 8, அ.தி.மு.க., 6, இந்திய கம்யூ.,1, மார்க்சிஸ்ட் கம்யூ.,1, வி.சி.க., 1 உறுப்பினர்களாக உள்ளனர். 11வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ராமசாமி இறந்ததால் அந்த இடம் காலியாக உள்ளது. தி.மு.க., சார்பில் சந்திரகலா தலைவாகவும், ஜோதி துணைத்தலைவராகவும் உள்ளனர். கடந்த பல மாதங்களாக தலைவர் வார்டு கவுன்சிலர்கள் இடையே சுமூகமான சூழல் இல்லாததால் பேரூராட்சியின் வளர்ச்சிப் பணிகள் முடங்கி விட்டன. பொதுமக்களுக்கான அடிப்படை தேவைகள் நிறைவேற்றுவதில் சுணக்கம் ஏற்படுகிறது. நிர்வாகத்தில் ஏற்படும் குழப்பத்தால் செயல் அலுவலர்களும் நிரந்தரமாக இங்கு பணி புரியவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் 15 க்கும் மேற்பட்ட செயல் அலுவலர்கள் மாற்றப்பட்டுள்ளனர். ஏற்கனவே செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதுடன் புதிய திட்ட பணிகளுக்கு அரசு நிதி பெற்று செயல்படுத்துவதும் இல்லை. முடங்கி கிடக்கும் பணிகள் குறித்து பொதுமக்கள் கூறியதாவது: பணி முடிந்தும் பயன்பாட்டிற்கு வராத மின் மயானம் நாகேந்திரன், ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பேரூராட்சியை சேர்ந்தவர்கள், 30 ஊராட்சி பொதுமக்களும் பயன்பெறும் வகையில் ஆண்டிபட்டி சுடுகாடு பகுதியில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ரூ. ஒரு கோடியில் மின்மயானம் அமைக்கும் பணி துவங்கியது. தற்போது பணிகள் முழுமை பெற்றுள்ளதாக கூறுகின்றனர். ஆனால் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. அதனால் இறந்தவர்கள் உடலை எரியூட்ட கூடுதல் செலவு செய்து தேனி மின் மயானத்திற்கு கொண்டு செல்கின்றனர். ஆண்டிபட்டி தொகுதியின் பல்வேறு இடங்களில் உள்ள சுடுகாடுகளில் விறகுமூலம் எரியூட்ட பல ஆயிரம் செலவு ஏற்படுகிறது. பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு மின் மயானம் பயன்பாட்டிற்கு கிடைக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டிபட்டி சுடுகாடு ஒட்டி உள்ள பல ஏக்கர் காலி இடத்தை பேரூராட்சி குப்பை கிடங்காக பயன்படுத்துகிறது. குப்பை கிடங்கை முறையாக பராமரிக்கவில்லை. அடிக்கடி குப்பையில் பரவும் தீ நச்சுப் புகையை ஏற்படுத்துகிது. இதனை தடுக்கும் நடவடிக்கை இல்லை. பயன் இல்லாத வணிக வளாகம் ராஜாராம், ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி வாரச்சந்தையில் மூலதன மானியத் திட்டத்தில் ரூ.3.5 கோடியில் கட்டப்பட்டுள்ள 257 கடைகள் கொண்ட வணிக வளாகம் பயன்பாட்டிற்கு வராமலேஉள்ளது. வாரச்சந்தை வியாபாரிகள் மழை, வெயில் காலங்களில் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். ஆண்டிபட்டி தெப்பம்பட்டி ரோட்டில் உள்ள முத்தமிழ் பூங்கா பராமரிப்பு இல்லை. சமீபத்தில் பூங்காவில் குழந்தைகளுக்கான புதிய விளையாட்டு, பொழுதுபோக்கு உபகரணங்கள் அமைக்கப்பட்டன. பூங்கா முழுவதும் குப்பை குவிந்து புதர் மண்டி உள்ளது. பூங்காவில் அமர்ந்து மது அருந்துவதால் குழந்தைகள் பெண்கள் வந்து செல்ல அச்சப்படுகின்றனர். பூங்காவை பராமரிக்கவும், பாதுகாப்புக்கும் பேரூராட்சி சார்பில் பணியாளர் நியமிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !