ஒதுக்கீடு செய்த வீடு வழங்க கோரி தர்ணா
தேனி: வடவீரநாயக்கன்பட்டியில் குடிசைமாற்று வாரிய வீட்டினை ஒதுக்கீடு செய்த பின், அதனை வழங்க அதிகாரிகள் மறுப்பதாக கூறி அல்லிநகரத்தை சேர்ந்த உமாதேவி, வேல்முருகன் தம்பதியினர் கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் தர்ணாவில் ஈடுபட்டனர்.போலீசாரிடம் அவர்கள் கூறியதாவது: வடவீரநாயக்கன்பட்டியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 110 தனி வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் வீடு கேட்டு விண்ணப்பித்தோம். வீட்டிற்கு ரூ.1.12 லட்சம் செலுத்த கூறினர். வீடு ஒதுக்கீடு செய்து தந்ததாக கூறி கட்சியை சேர்ந்த ஒருவர் இதற்காக ரூ.15ஆயிரம் வாங்கினார். அந்த பணத்தை திருப்பி தர மறுக்கிறார். வீட்டிற்கான பணத்துடன் அதிகாரிகள் அலுவலகத்திற்கு வர கூறினர். காலையில் அலுவலகத்திற்கு சென்ற போது, அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதனால் தர்ணாவில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். மனுவை கலெக்டரிடம் வழங்க போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.