மருத்துவமனையில் 6 மாதங்களில் 3 நோயாளிகளை கடித்த எலிகள்
மூணாறு: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே அடிமாலி தாலுகா அரசு மருத்துவமனையில் ஆறு மாதங்களில் மட்டும் மூன்று நோயாளிகளை எலி கடித்தது விசாரணையில் தெரியவந்தது.அடிமாலி அருகே கம்பளிகண்டம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஷாஜன் 45. இவருக்கு அடிமாலி தாலுகா அரசு மருத்துவமனையில் மூன்று நாட்களுக்கு முன் காலில் அறுவை சிகிச்சை நடந்தது. மருத்துவமனை இரண்டாம் தளத்தில் உள்ள கட்டண அடிப்படையிலான தனி அறையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவரது இரு கால் பெருவிரல்களை மே 14ல் எலி கடித்ததால் பலத்த காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் மற்ற நோயாளிகள், மருத்துவமனை அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் மூன்று நோயாளிகளை எலிகள் கடித்தது என அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்தது.இம்மருத்துவமனையில் இரண்டு பகுதி நேர தூய்மை பணியாளர்கள் உட்பட 21 தூய்மை பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் 11 பேர் மருத்துவமனை நிர்வாக குழுவால் நியமிக்கப்பட்டவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் அரசியல் செல்வாக்குமிக்கவர்கள் என்பதால் முறையாக பணிகளை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. அதனால் மருத்துவமனை வளாகம் சுகாதாரமற்ற நிலையில் உள்ளதால் எலி உட்பட பல்வேறு விஷ பூச்சிகள் வார்டுகளில் உலா வருகின்றன. தூய்மை பணிகள் முறையாக நடப்பதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அருண் தெரிவித்தார்.