தேனி கலெக்டர் ஆபீசில் தபால் நிலையம் அமைக்க கோரிக்கை
தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் தபால் நிலையம் அமைக்க வேண்டும் என பல்வேறு துறை அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கலெக்டர் அலுவலகங்களில் பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்த அலுவலகங்களுக்கு தலைமை செயலகம், பிற மாவட்டங்கள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பதிவு மற்றும் சாதாரண தபால்கள் வருகின்றன. அதே போல் இங்கிருந்து பிற மாவட்டங்கள், தலைமை செயலகத்திற்கு தபால்கள் அனுப்புகின்றனர்.அலுவலர்கள் பலரும் பதிவு தபால்கள் அனுப்ப 2 கி.மீ.,துாரத்தில் உள்ள அரண்மனைப்புதுார் தபால் நிலையம், தேனி தலைமை தபால் நிலையத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் அலைச்சல் ஏற்படுவதுடன், பணிகள் பாதிக்கப்படுகின்றன.அலுவலர்கள் கூறுகையில், 'பல்வேறு மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் தபால் நிலையங்கள் செயல்படுகின்றன. அதே போல் தேனி கலெக்டர் அலுவலக வளாகத்திலும் கிளை தபால் அலுவலகம் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.