அரசு மருத்துவமனையில் கழிவுகளை எரிப்பதால் குடியிருப்போர் அவதி
கம்பம் : கம்பம் அரசு மருத்துவமனையில் குப்பை, மருத்துவ கழிவுகளை இரவில் தீ வைத்து எரிப்பதால் வெளிவரும் புகையால் ஆங்கூர்பாளையம் ரோட்டில் வசிக்கும் பொதுமக்களை அவதிக்குள்ளாவதாக புகார் கூறுகின்றனர்.கம்பம் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரம் பேர் வெளிநோயாளிகளும், 300 பேர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுகின்றனர். கடந்தாண்டு தரச் சான்று பெற்ற மருத்துவமனையாகும். இங்கு சேகரமாகும் குப்பை, மருத்துவக் கழிவுகளை முறையாக கையாளாமல் வளாகத்தின் திறந்த வெளியில் கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இரவில் குப்பையை எரிக்கின்றனர். இவ்வாறு கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் புகை, மருத்துவமனைக்கு அருகில் உள்ள ஆங்கூர் பாளையம் ரோட்டில் இருக்கும் நூற்றுக்கணக்கான வீடுகளில் வசிப்பவர்களை அவதிக்குள்ளாகின்றனர்.அப்பகுதியில் வசிப்போர் கூறுகையில், 'மருத்துவமனை வளாகத்திற்குள் குப்பை, மருத்துவ கழிவுகளை தீ வைத்து எரிப்பதால் பொதுமக்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. புகையை சுவாசிக்க முடியாமல் குழந்தைகள், முதியோர் சிரமப்படுகின்றனர். அதிகாரிகள் மருத்துவகழிவுகளை வளாகத்தில் எரிப்பதை தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்கின்றனர்.