பல ஆண்டுகளாக துார்வாரப்படாத சாக்கடையால் சுகாதாரக்கேடு தேனி நகராட்சி காந்திநகர் குடியிருப்போர் குமுறல்
தேனி : தேனி நகராட்சி 9வது வார்டு காந்திநகரில் பல ஆண்டுகளாக துார்வாரப்படாத சாக்கடையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டும், தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். தேனி அல்லிநகரம் நகராட்சியில் 9வது வார்டில் காந்திநகர் 1,2,3,4,5 வது தெருக்கள், வள்ளிநகர், நேருஜிரோடு உள்ளிட்ட பகுதிகள் இடம் பெற்றுள்ளன. இதில் காந்திநகர் 3வது தெருவில் 40 வீடுகளில் 180க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். நகராட்சி அடிப்படை வசதிகள் செய்து தராததால் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் சிவா, கருப்பையா, காளிச்சாமி, மாரியம்மாள் ஆகியோர் தினமலர் நாளிதழ் குடியிருப்போர் குரல் பகுதிக்காக பேசியதாவது: சாக்கடைகள் துார்வாரி பல ஆண்டுகள் ஆகிறது. பல இடங்களில் தண்ணீர் வரும் போது சாக்கடையில் தண்ணீர் சென்று குளம் போல் தேங்குகிறது. தேங்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் கொசு தொந்தரவு அதிகமாக உள்ளது. இதனால் தெருவில் குழந்தைகள், முதியோர் பலரும் காய்ச்சல் உள்ளிட்ட நோய் பாதிப்பிற்குள்ளாகின்றனர். சாக்கடை துார்வார கூறி நகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் பலனில்லை. தெருவின் நுழைவு பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் தரைப்பாலம் சேதமடைந்தது. அதனை சீரமைக்காமல் குழாய் பதித்து சென்றனர். மழைகாலங்களில் நீர் நிரம்பி ரோட்டில் செல்கிறது. சிலர் இறைச்சி கழிவுகளையும் சாக்கடையில் கொட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் தெருநாய்கள் அதிகம் சுற்றுகின்றன.தெருநாய்களால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். இரவில் டூவீலர்களில் வருவோரை துரத்துவதால் பலரும் தடுமாறி விழுகின்றனர்.சிறுவர்களையும் கடிக்கிறது. தெரு நுழைவாயில் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி பல ஆண்டுகளாக பயன்பாடின்றி உள்ளது. அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். நகராட்சி சார்பில் கொசுமருந்து தெளிக்க வேண்டும், குப்பை வாங்குவதற்கு தினசரி துாய்மை பணியாளர்கள் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிமுடித்து திரும்பும் பெண்களை சிலர் கேலி கிண்டல் செய்வது வாடிக்கையாக உள்ளது. தொடர் திருட்டுகள்... காந்திநகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக டூவீலர்கள் திருடு போவதும், வீட்டிற்குள் புகுந்து அலைபேசிகள், நகைகள், பொருட்களை சிலர் திருடி செல்கின்றனர். இதனை தடுக்க போலீசார் இப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். நகராட்சி சார்பில் சாக்கடை துார்வார, தெருநாய்களை கட்டுப்படுத்துதல் உள்ள பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.