இடுக்கியில் மழை குறைந்தும் தொடரும் கட்டுப்பாடுகள்
மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் மழை வெகுவாக குறைந்தபோதும் மாவட்ட நிர்வாகம் விடுத்த சில கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.இம்மாவட்டத்தில் மே 24 முதல் ஒரு வாரம் தொடர்ந்து கனமழை பெய்தது. அதனால் மூன்று பேர் இறந்த நிலையில் வீடுகள், விளைநிலங்கள், விளை பொருட்கள், ரோடுகள், மின்கம்பங்கள் என பல்வேறு சேதங்கள் ஏற்பட்டன.ஜூன் முதல் நாள் முதல் மழை குறைய துவங்கிய நிலையில் நேற்று மழை வெகுவாக குறைந்து பல பகுதிகளில் வெயில் காணப்பட்டது. நேற்று மதியம் 12:00 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் சராசரி மழை 2.32 மி.மீ., பதிவானது.இம்மாவட்டத்தில் 14 ஆக இருந்த நிவாரண முகாம்களின் எண்ணிக்கை நேற்று ஒன்றாக குறைந்தது. தற்போது பீர்மேடு தாலுகா அய்யப்பன் கோவில் ஊராட்சியில் கரிக்குளம் கே சப்பாத்து அரசு ஆரம்ப பள்ளியில் அமைக்கப்பட்ட நிவாரண முகாமில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மட்டும் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.மாவட்ட நிர்வாகம் சுற்றுலாவுக்கு விடுத்த தடை உத்தரவு நேற்று முன்தினம் வாபஸ் பெறப்பட்டபோதும் நீர் நிலை சுற்றுலா, டிரெக்கிங் உள்பட சாகச பயணத்திற்கு விடுக்கப்பட்ட தடை தொடர்கிறது. அதேபோல் கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் ' கேப்' ரோடு வழியில் வாகனங்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை உத்தரவும் நேற்று இரவு 7:00 மணி வரை 'வாபஸ்' பெறவில்லை.மூணாறில் நேற்று காலை முதல் வெயில், அதன் பிறகு மழை, பின்னர் மேக மூட்டம் என மூன்று விதமான சூழல் நிலவியது. மூணாறைச் சுற்றி பல பகுதிகளில் மின்தடை, தொலை தொடர்பு சேவை பாதிப்பு ஆகியவை தொடர்ந்த வண்ணம் உள்ளதால் தொழிலாளர்கள், பொது மக்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.