| ADDED : பிப் 18, 2024 01:38 AM
கம்பம்: இஞ்சி சாகுபடியை விவசாயிகள் மத்தியில் பிரபலப்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் தோட்டக்கலைத்துறை கம்பம் பகுதியில் சோதனை முறையில் சாகுபடி செய்ய திட்டமிட்டுள்ளது.காய்கறிகளில் அதிக மருத்துவ குணங்கள் கொண்டது இஞ்சியாகும். செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்க கூடியது. ஆனால் தமிழகத்தில் இஞ்சி சாகுபடி அதிகம் இல்லை. ஊட்டி கூடலுார் பகுதி மற்றும் கர்நாடகா ஒட்டியுள்ள பகுதிகளில் சிறிதளவு சாகுபடியாகிறது. தமிழக இஞ்சி தேவையை கர்நாடகா பூர்த்தி செய்கிறது.இஞ்சி மலைப்பாங்கான பிரதேசங்களில் சாகுபடியாகிறது. குறிப்பாக நிழல் இருக்க வேண்டும். சாகுபடி காலம் 10 முதல் 12 மாதங்களாகும். பராமரிப்பு செலவுகள் குறைவு தான். ஆனால் நடவு செய்ய விதை இஞ்சி ஏக்கருக்கு 400 கிலோ தேவைப்படும். விதை இஞ்சி சத்தியமங்கலம் பகுதியில் கிடைக்கும்.தோட்டக்கலைத்துறை இஞ்சி சாகுபடியை ஊக்குவிக்க சோதனை ஒட்டமாக கம்பம் பகுதியில் ஒரு சிலருக்கு விதை இஞ்சி கொடுத்து சாகுபடி செய்ய அறிவுறுத்தியது. ஆனால் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கவில்லை. இது தொடர்பாக கம்பம் தோட்டக் கலை உதவி இயக்குனர் பாண்டியன் ராணா கூறுகையில், எக்டேருக்கு ரூ.12 ஆயிரம் மானியம் வழங்கி, தென்னையை சுற்றி நடவு செய்துள்ளனர். எதிர்பார்த்த மகசூல் இல்லை. பராமரப்பில் கவனம் தேவை. இருந்த போதும் இஞ்சி சாகுபடியை ஊக்குவிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம் என்றார்.அரசு சார்பில் கூடுதல் மானியம், விதை இஞ்சி வழங்க தோட்டக்கலைத்துறை முன்வர வேண்டும். அரசு கூடுதல் மானியம் வழங்கினால் சாகுபடி செய்திட விவசாயிகள் ஆர்வம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.