உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விஜயதசமியை முன்னிட்டு கோயில் பள்ளிகளில் நடந்த வித்யாரம்பம்; பெற்றோர்கள் ஆர்வம்

விஜயதசமியை முன்னிட்டு கோயில் பள்ளிகளில் நடந்த வித்யாரம்பம்; பெற்றோர்கள் ஆர்வம்

தேனி: விஜயதசமியை முன்னிட்டு கோயில்கள், பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆர்வமாக அழைத்து வந்து எழுத கற்றுக்கொடுத்தனர். விஜயதசமி அன்று கல்வி துவங்க உகந்த நாள் ஆகும். அதனால் குழந்தைகளுக்கு எழுத்து பயிற்சியை அந்நாளில் துவங்குகின்றனர். நேற்று விஜயதசமியை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்கள், மழலையர் பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. பெற்றோர் குழந்தைகளை அழைத்து வந்து விரலி மஞ்சளை எழுது கோலாக பயன்படுத்தி நெல் மணிகளில் குழந்தைகளுக்கு கையை பிடித்து எழுத கற்றுக்கொடுத்தனர். கோயில்களில் குருக்கள், பள்ளியில் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் முன்னிலை இந்நிகழ்ச்சி நடந்தது. தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து பெற்றோர் குழந்தைகளை அழைத்து வந்து எழுத கற்றுக்கொடுத்தனர். நிகழ்வை கோயில் குருக்கள் கணேசன், நிர்வாகிகள் செய்திருந்தனர். உத்தமபாளையம்: உத்தமபாளையம் விகாசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. இதில் தட்டில் மஞ்சள் கலந்த அரிசியில் குழந்தைகளை ' அ ' எழுத வைத்தனர். பள்ளி சேர்மன் இந்திரா குழந்தைகளை உட்கார வைத்து அ எழுத சொல்லி உற்சாகப்படுத்தினார். நிகழ்ச்சியில் தாளாளர் உதயகுமார் , நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி , முதல்வர்கள் அவிலா தெரசா, குமரேசன் ஆகியோர் பங்கேற்றனர். ஆண்டிபட்டி: லிட்டில் பிளவர் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சேர்க்கை நடந்தது. பெற்றோருடன் புதிய சேர்க்கைக்கு வந்த குழந்தைகளை வித்தியாரம்பம் செய்து அரிசியில் 'அ' என்ற எழுத்தை எழுத வைத்து அவர்களின் கல்வியை துவக்கி வைத்தனர். புதிதாக பள்ளிக்கு வந்த மாணவர்களை பள்ளி தாளாளர் ஹென்றி அருளானந்தம், செயலாளர் மாத்யூ ஜோயல், முதல்வர்கள் உமா மகேஸ்வரி, லதா ஆகியோர் வாழ்த்தி பரிசுகள் வழங்கினர். விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பூமா, கவிதா, ராகினி, திவ்யா, பானுப்பிரியா, தமிழ்ச்செல்வி, தெய்வநிரஞ்சனா உட்பட பலர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை