முல்லைப் பெரியாற்றில் மூழ்கி பள்ளி மாணவர் பலி
தேனி : வீரபாண்டியில் நடந்த விஷேசத்திற்கு வந்த போடி ரெங்கநாதபுரத்தை சேர்ந்த பள்ளி மாணவர் வெற்றிவேல் செல்வன் 10, முல்லைபெரியாற்றில் குளிக்க சென்று, நீரில் மூழ்கி பலியானார்.தேனி போடி ரெங்கநாதபுரம் ராம்குமார், செந்துார் லட்சுமி. இவர்களது மகன் வெற்றிவேல்செல்வன். இவர் அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 5ம் வகுப்பிலிருந்து 6ம் வகுப்பு செல்ல உள்ளார். வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோயிலை சுற்றி பல்வேறு இடங்களில் விசேஷங்கள் நடந்து வருகிறது. ஒரு விஷேச நிகழ்வில் பங்கேற்க தாயார், உறவினர்களுடன் வெற்றிவேல் செல்வன் வீரபாண்டிக்கு வந்தார். வீரபாண்டி சென்றதும், ஆற்றில் குளிக்கச் செல்கிறேன் என கூறிச் சென்றவர், உறவினர்களிடம் திரும்பி வரவில்லை. உறவினர்கள் வீரபாண்டி பகுதியில் தேடி வந்தனர்.இந்நிலையில் வீரபாண்டி முல்லைப் பெரியாற்றில் தடுப்பணை அருகே உறைகிணறு பகுதியில் அவரது உடல் இருந்தது. அப்பகுதியில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் போலீசிற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை மீட்டு வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மாணவர் இறந்து விட்டதால், அவரது உடல் தேனி மருத்துவக்கல்லுாரி கல்லுாரி மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தாயார் செந்துார் லட்சுமி புகாரில் வீரபாண்டி எஸ்.ஐ., ராஜசேகர் தலைமையில் போலீசார் விசாரிக்கின்றனர்.