| ADDED : ஜன 29, 2024 06:33 AM
பெரியகுளம்: 'லட்சுமிபுரம் செங்குளம் கண்மாயில் ஆகாயத்தாமரை அதிகரித்துள்ளதால் நீர் நிலைகள் மாசுபடும் அபாயநிலை உருவாகியுள்ளதால், அவற்றை அகற்ற வேண்டும்.' என, ஊர் பொது மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் செங்குளம் 50 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் உள்ளது. லட்சுமிபுரம் மலைப் பகுதியான சொருகுமலையில் பெய்யும் மழை, செங்குளம் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் கண்மாய்க்கு தண்ணீர் வருகிறது. இக்கண்மாய் கரையில் லட்சுமிபுரம் ஊராட்சி மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் ஆதார இரு கிணறுகள், ஏராளமான போர்வெல்கள் உள்ளன. மேலும் கண்மாய் அருகே ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, நூலகம், சமுதாயக்கூடம், கோயில் உள்ளது. ஆகாயத்தாமரை அதிகரித்துள்ளதால் கண்மாய் சுற்றுப்பகுதி மாசுபட்டு வருகிறது.இக்கண்மாய் நீரினால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை, வாழை, கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. முக்கால் வாசி அளவில் ஆகாயத்தாமரை வளர்ந்துள்ளதால் நீர் நிலைகள் மாசுபடும் அபாய நிலை உள்ளது. ஊர் பொது மக்கள் ஆகாயத்தாமரைகளை அகற்றி நீர் நிலைகளை காக்க வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி தலைவர் ஜெயமணியிடம் மனுக்கள் கொடுத்துள்ளனர். ஊராட்சி நிர்வாகம் பொதுப் பணித்துறையினரிடம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.கேசவன், சமூக ஆர்வலர்: 70 ஆண்டுகளில் முதன் முதலாக இந்த கண்மாய் ஆகாயத்தாமரை சூழ்ந்துள்ளது. நீர்நிலைகளை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது பொதுப்பணித்துறை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்., என்றார்.