டாஸ்மாக் கடையை அகற்ற கையெழுத்து இயக்கம்
கூடலுார்: கூடலுார் நகரின் மையப் பகுதியில் இயங்கும் டாஸ்மாக் கடைகளை இடம் மாற்றம் செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.கூடலூர் மெயின்பஜார், பழைய பஸ் ஸ்டாண்ட், பகுதிகளில் வியாபார நிறுவனங்கள் அதிகம். தனியார் மருத்துவமனைகள், ரத்தப் பரிசோதனை நிலையம், ஜவுளிக்கடைகள், மெடிக்கல் ஸ்டோர், பலசரக்கு மளிகை கடைகள், ஓட்டல்கள் அதிகம் உள்ளன. ஊரின் மையப் பகுதியாக இருப்பதால் மக்கள் நடமாட்டம் அதிகம். இப்பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகளும், அதனை ஒட்டி மதுபான பார்களும் உள்ளன. குடிமகன்கள் தொல்லையால் இப்பகுதியில் பெண்கள் கடந்து செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றர். மேலும் பள்ளி வாகனங்கள், டூவிலர், கார் என அதிகம் வருவதால் போக்குவரத்து நெரிசலும் அதிகமாகியுள்ளது. ஊரின் மையப் பகுதியில் இயங்கும் இரண்டு டாஸ்மாக் கடைகளையும்அகற்றி மாற்று இடத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி இதற்கான மனுவை தமிழக முதல்வருக்கு அனுப்பி உள்ளனர்.