சிவகாமியம்மன் பூலாநந்தீஸ்வரர் கோயில் தெப்பத் திருவிழா நடத்த வலியுறுத்தல்
சின்னமனூர் : சின்னமனூர் சிவகாமியம்மன் பூலாநந்தீஸ்வரர் கோயில் தெப்பத் திருவிழா நடத்த பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.இக் கோயில் ஆயிரம் ஆண்டு காலம் பழமையானது. கடந்த வாரம் திருப்பணிகள் நிறைவு பெற்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஊர் முக்கிய பிரமுகர்கள் சேர்ந்து தலைமை ஒருங்கிணைப்பாளர் துர்காவஜ்ரவேல் தலைமையில் திருப்பணி செய்து கும்பாபிஷேகத்தை ஹிந்து அறநிலையத் துறையினருடன் இணைந்து நடத்தினர்.கோயிலில் உள்ள தெப்பத்தில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் திருவிழா நடத்தப்படும். ஆனால் 2019 க்கு பின் தெப்பத் திருவிழா நடத்தவில்லை. தற்போது தெப்பத்தை பராமரிப்பு செய்து முழு அளவில் தண்ணீர் நிரப்பி தயார் நிலையில் உள்ளது. எனவே தெப்பத் திருவிழாவை நடத்த ஊர் பிரமுகர்கள் அல்லது ஹிந்து சமய அறநிலைய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஹிந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டி கூறுகையில், திருப்பணி, கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் தெப்பத் திருவிழாவையும் நடத்தினால் சிறப்பாக இருக்கும். அல்லது வரும் தை மாதத்திலாவது தெப்பத் திருவிழாவை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.