உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 18 வயதுக்கு கீழ் பிரசவத்திற்கு வந்தால் தகவல் அளிக்க சமூக நலத்துறை உத்தரவு

18 வயதுக்கு கீழ் பிரசவத்திற்கு வந்தால் தகவல் அளிக்க சமூக நலத்துறை உத்தரவு

கம்பம்: 18 வயதுக்கு கீழ் திருமணமான சிறுமிகள் பிரசவத்திற்கு அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுமதிக்கப்பட்டால் சமூகநலத்துறைக்கு தகவல் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.குழந்தை திருமணங்களை தடுக்க கடுமையான சட்டங்கள் இருந்தபோதும், இளம் வயது திருமணங்கள் நடக்கிறது. கடந்த ஓராண்டில் தேனி மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிக எண்ணிக்கையில் நடந்துள்ளது. 18 வயது நிரம்பாத பெண் குழந்தை திருமணங்களை தடுக்க் விழிப்புணர்வு பிரச்சாரம், நடவடிக்கை மேற்கொண்டாலும் குழந்தை திருமணங்களை முற்றிலும் கட்டுப்படுத்த முடியவில்லை. இது போன்ற திருமணங்கள் நகரங்களை விட கிராமங்களில் அதிகமாக நடந்து வருகிறது.இத்திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் நடப்பதால் வெளியே தெரிவதில்லை.ஆனால் சிறுமி கர்ப்பம் தரித்து, பிரசவத்திற்கு அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும்போது தான் தெரிகிறது. அதிலும் சிலர் தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் பார்த்து செல்கின்றனர். எனவே 18 வயது நிரம்பாத சிறுமிகள் பிரசவத்திற்கு அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டால் அவர்கள் பற்றிய தகவல்களை உடனே சமூகநலத்துறை, குழந்தை பாதுகாப்பு அலுவலருக்கோ தெரிவிக்க வேண்டும். இதுபற்றி சமூகநலத்துறை சார்பில் தனித்தனியாக அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருந்துவமனைகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் சிறுமிகளின் வயதை உறுதி செய்ய பள்ளி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், ஆதார் உள்ளிட்ட ஏதாவது ஒரு ஆவணத்தை கேட்டு வாங்கவும், அவ்வாறு தராத பட்சத்தில் அவர்களைப் பற்றிய விபரங்களை சம்பந்தப்பட்ட கிராம செவிலியர் மூலம் சேகரித்து அனுப்பவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ