குட்கா வழக்கில் வாலிபரை விடுவிக்க பணம் பெற்ற சிறப்பு எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம் தேனி எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவு
தேனி: பழனிசெட்டிபட்டியில் குட்கா பறிமுதல் செய்த வழக்கில் விசாரணைக்கு அழைத்து வந்த ராஜஸ்தான் வாலிபரை வழக்கில் இருந்து விடுவிக்க பணம் பெற்றது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததால் தனிப்படை குற்றத்தடுப்புப் பிரிவு சிறப்பு எஸ்.ஐ., ஜெகனை, ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவிட்டார்.தேனி சுப்பன்செட்டி தெருவில் உள்ள ஒரு குடோனில் பதுக்கிய ரூ.1.67 லட்சம் மதிப்புள்ள 180 கிலோ எடையுள்ள 23 புகையிலை மூடைகளை தேனி டி.எஸ்.பி., சுரேஷ் தலைமையிலான குற்றத்தடுப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். வாழையாத்துப்பட்டி நாகராஜ் 55, அரண்மனைப்புதுார் பாண்டி 65, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த அமர்சிங் 33, ஆகிய மூவரை அக்.15ல் கைது செய்தனர். சம்பவ நாளில் குடோனில் போலீசார் சோதனை செய்தபோது கைதான அமர்சிங்கின் உறவினர் வாலிபர் உணவு கொடுக்க வந்தார். அவரையும் போலீசார் பழனிசெட்டிபட்டி ஸ்டேஷன் அழைத்துச் சென்றனர். அவருக்கு எதுவும் தெரியாது'என விசாரணையில் அறிந்த சிறப்பு எஸ்.ஐ., ஜெகன், அவரை வழக்கில் இருந்து விடுவிக்க பணம் பெற்று, விடுவித்துள்ளார். தொடர்ந்து தனிப்பிரிவு போலீசார், விசாரணை அதிகாரிகள் அமர்சிங்கின் உறவினர்கள் இருவர் என நால்வரிடம் இரு நாட்களாக எஸ்.பி., விசாரித்தார். நேற்று இரவு சிறப்பு எஸ்.ஐ., ஜெகனை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.