ஆண்டிபட்டியில் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம்! குற்றங்களை தடுக்க முடியால் போலீஸ் திணறல்
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் குற்றங்கள், போக்குவரத்து விதி மீறல்கள் அதிகரித்து வருவதால் நகரில் 'சிசிடிவி' கண்காணிப்பு கேமரா பொறுத்துவது அவசியம் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதி கொண்டமநாயக்கன்பட்டி செக் போஸ்டில் இருந்து ஆண்டிபட்டி தாலுகா அலுவலகம் வரை ஒன்றரை கி.மீ., தூரத்தில் உள்ளது. நகர் பகுதியில் செல்லும் கொச்சி - -தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையுடன் 100க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் புள்ளிமான்கோம்பை ரோடு, ஏத்தக்கோயில் ரோடு, வைகை அணை ரோடு, தெப்பம்பட்டி ரோடு போன்ற முக்கிய நெடுஞ்சாலை ரோடுகளும் பல கிராம சாலைகளும் இணைகின்றன. 30,000 அதிக மக்கள் தொகை கொண்ட ஆண்டிபட்டியில் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் சம்பந்தமாக தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். ஆண்டிபட்டியை மையமாக கொண்டு 30க்கும் மேற்பட்ட அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. நகரில் முக்கிய இடங்களை கண்காணிக்கும் வகையில் பல ஆண்டுக்கு முன் போலீசார், வர்த்தகர் சங்கம் சார்பில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் டிவி மூலம் கண்காணிக்கப்பட்டது. நகர் பகுதியில் ஏதேனும் விபத்து, சட்டம் ஒழுங்கு பிரச்னை, திருட்டு நடந்தால் உடனடியாக அந்த இடத்திற்கு சென்று நடவடிக்கை எடுப்பதற்கு வசதியாக இருந்தது. தொடர்ச்சியாக பராமரிக்காததால் கேமராக்கள் அனைத்தும் செயல் இழந்தது.தனியார் இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் தேவையான நிகழ்வுகள் பதிவாவதில்லை. குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் நிகழ்வுகளை சேமித்து வைப்பதற்கான வசதியும் இல்லை. தெப்பம்பட்டி ரோடு, அரசு மருத்துவமனை எதிரில், வைகை ரோடு, பாப்பம்மாள்புரம், எம்.ஜி.ஆர்.சிலை, காளியம்மன் கோயில் வளைவு, கடைவீதி, வாரச்சந்தை, பஸ் ஸ்டாண்ட், ஏத்தக் கோயில் ரோடு, கொண்டமநாயக்கன்பட்டி செக் போஸ்ட் போன்ற முக்கிய இடங்களில் பொதுமக்கள்,வர்த்தக சங்க பங்களிப்புடன் மீண்டும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி போலீசார் மூலம் கண்காணிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.