| ADDED : நவ 21, 2025 05:27 AM
மூணாறு: மூணாறு அருகே மாட்டுபட்டியில் ஜீப் ௧௦௦ அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர். தமிழகம் கரூர் ஆண்டான்கோயில் பகுதியில் உள்ள ஆங்கிலம் மீடியம் பள்ளியைச் சேர்ந்த 8, 9, 10 வகுப்புகளில் படிக்கும் 95 மாணவர்கள், ஆசிரியர்கள் கொண்ட குழுவினர் இரு பஸ்களில் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் மூணாறில் இருந்து நேற்று காலை 10க்கும் மேற்பட்ட ஜீப்புகளில் மாட்டுபட்டி சென்றனர். அதில் ஒரு ஜீப்பை மூணாறு அருகே உள்ள சொக்கநாடு எஸ்டேட் டிரைவர் முனியசாமி 37, ஓட்டினார். அதில் ஒன்பது மாணவர்கள் இருந்தனர். மாட்டுபட்டி பகுதியில் உள்ள தனியார் ஆங்கில பள்ளி அருகே முன்னால் சென்ற பஸ்சை முந்த முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த ஜீப் ௧௦௦ அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில் மாணவர்கள் ரிதீஷ் 14, பலத்த காயம் அடைந்த நிலையில் சசிநாதன் 12, சஞ்சய் 14, சபரி 14, உள்ளிட்டோர் சிறிய காயங்களுடன் தப்பினர். மூணாறில் டாடா மருத்துவமனையில் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ரிதீஷ் மேல் சிகிச்சைக்காக ஆலுவாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.