கம்பத்தில் ரூ.4 கோடியில் தார் ரோடு பணிகள் தீவிரம்
கம்பம்: கம்பத்தில் ரூ.4.9 கோடி மதிப்பீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோடு அமைக்கும் பணி மீண்டும் துவங்கியுள்ளது. கம்பம் நகராட்சியில் தமிழ்நாடு சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தில் 7.64 கி.மீ. தூரத்திற்கு பல்வேறு தெருக்களில் ரூ.3.40 கோடி மதிப்பீட்டில் தார் ரோடு அமைக்க டெண்டர்கள் விடப்பட்டது. சிறப்பு நிதியின் கீழ் 1.5 கி.மீ. தூரத்திற்கு ரூ.69 லட்சம் மதிப்பீட்டில் தெருக்களில் பேவர் பிளாக் பதிக்கும் பணிகளுக்கும் டெண்டர் விடப்பட்டு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. ஒப்பந்தம் பெற்ற ஒப்பந்தகாரர் கடந்த மாதம் ஜூலை 12 ல் பணிகளை துவக்க முயன்ற போது பெரும்பாலான கவுன்சிலர்கள் ரோடு பணிகளை செய்ய அனுமதிக்க வில்லை. சாக்கடை அமைத்தபின் ரோடு அமைக்க வேண்டும் என்றும், தெருக்களில் உள்ள பழைய ரோடுகளை தோண்டு புதிய ரோடு அமைக்க வலியுறுத்தினர். நகராட்சி அதிகாரிகள், 'விதிகளில் அதற்கு இடமில்லை என்றும், நகரில் உள்ள 57 வீதிகளில் 4 வீதிகளில் மட்டும் ஒரு இன்ச் தோண்டி அமைக்க உள்ளோம்,' என்றனர். கவுன்சிலர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக ரோடு பணிகளை துவக்கிய ஒப்பந்தகாரர்கள் பணிகளை நிறுத்தி விட்டனர். பின்னர் கடந்த வாரம் கவுன்சிலர்களிடம் அதிகாரிகள் விளக்கி கூறியதை தொடர்ந்து கவுன்சிலர்கள் அமைதியானார்கள், தற்போது நகரில் பல வீதிகளில் தார் ரோடு அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.