| ADDED : ஜன 31, 2024 01:41 AM
தேனி:'தமிழகத்தில் பா.ஜ., கூட்டணி 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என தேனியில் லோக்சபா தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த பின் , பா.ஜ., மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:லோக்சபா தேர்தல் தொடர்பாக கட்சியினர் தீவிர களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' யாத்திரை மக்களை கவர்ந்துள்ளது.மோடி மீண்டும் பிரதமர் ஆவார். எங்கள் இலக்கு தேசிய அளவில் 400 தொகுதிகளுக்கு மேலும், தமிழகத்தில் 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவதாகும். கூட்டணி குறித்து தேசிய தலைவர் நட்டா, மாநிலத் தலைவர் தெரிவிப்பர்.உசிலம்பட்டியில் நேதாஜி சிலை அமைப்பது, முல்லைப் பெரியாறு அணையில் தமிழக உரிமை நிலைநாட்டுவது, கண்ணகி கோயிலில் மாதந்தோறும் பூஜை உள்ளிட்ட கோரிக்கை குறித்து தேர்தல் அறிக்கையில் இடம் பெறும். போடி - மதுரை ரயில் வாரம் 6 நாட்கள் இயக்கப்படும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது என்றார்.