மாணவர்களுக்கு ரயில்களில் மீண்டும் கட்டண சலுகை; ஆசிரியர்கள் வலியுறுத்தல்
தேனி: கல்விச்சுற்றுலா, விளையாட்டுப்போட்டிகளுக்கு மாணவர்கள் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களுக்கு சென்ற வர வசதியாக ரயில்களில் மாணவர்களுக்கு மீண்டும் சலுகை கட்டணம் அமல்படுத்த வேண்டும் என ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் வலியுறுத்தியுள்ளனர். கொரோனா காலத்திற்கு முன்பு வரை ரயில்கள் முன்பதிவில் முதியோர்கள், பள்ளி மாணவர்களுக்கு சலுகை கட்டணம் இருந்தது. இதனால் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களுக்கு கல்விச்சுற்றுலா, கல்வி தொடர்பான பயணங்களுக்கு மாணவர்களை அழைத்து செல்லும் போது குறைந்த கட்டணத்தில் முன்பதிவு செய்து அழைத்து சென்றனர். கொரோனா தாக்குதலுக்கு பிறகு ரயில்கள் பயணத்தில் முதியோர், மாணவர்கள் சலுகை கட்டணம் ரத்து செய்யப்பட்டது. இது தற்போது வரை தொடர்கிறது. இதனால் விளையாட்டு தொடர்பாக வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு செல்லும் மாணவர்கள், கல்விச்சுற்றுலா செல்லும் பள்ளிகள் பஸ்களை பயன்படுத்துகின்றனர். இதனால் மாணவர்கள் கூடுதலாக செலவிடும் சூழல் உள்ளது. இதனை தவிர்க்கவும் கல்விச்சுற்றுலா, கல்வி பயணங்கள் மேற்கொள்ளும் மாணவர்களுக்காகவும் சலுகை கட்டணத்தை மீண்டும் ரயில்வே நிர்வாகம் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.