கலெக்டர் உத்தரவிட்டும் புதுப்பிக்காத அங்கன்வாடி மையம் அடிப்படை வசதியின்றி தவிக்கும் வடுகபட்டி 13வது வார்டு மக்கள்
பெரியகுளம் : பெரியகுளம் அருகே வடுகபட்டி பேரூராட்சி 13 வது வார்டு வள்ளுவர் காலனியில் அங்கன்வாடி மையம், சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ள துணை சுகாதார நிலையம் சீரமைக்க முந்தைய கலெக்டர் முரளீதரன் உத்தரவிட்டும் இன்னும் சீரமைக்காததால் அப்பகுதி வசிக்கும் மக்கள் புலம்புகின்றனர்.பெரியகுளம் அருகே, வடுகபட்டி பேரூராட்சியில் உள்ள வெள்ளைப் பூண்டு கமிஷன் மண்டி, வெற்றிலை ஆகியவற்றிற்கு விலை நிர்ணயிப்பதில் தமிழகத்தில் முன்னோடி கிராமம் ஆகும். இப் பேரூராட்சியில் 13 வது வார்டு வள்ளுவர் தெரு, வள்ளுவர் காலனியில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதி மக்கள் குடிநீருக்கு 10 வது வார்டு செல்லும் நிலை உள்ளது. வள்ளுவர் தெருவில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு தொட்டி சேதமடைந்துஇடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இத் தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.இதனை இடித்து விட்டு புதிதாக தொட்டி கட்டி சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து தண்ணீர் வழங்க கோரி இப்பகுதி மக்கள் கிராம சபா கூட்டத்தில் மனு கொடுத்து பல மாதங்களாகியும் தீர்வு ஏற்பட வில்லை என குமுறுகின்றனர். தெருக்களில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் கற்கள் முறையாக பதிக்காததால் கற்கள் சேதமடைந்து வருகிறது. இந்தப்பகுதியில் புதிதாக டூவீலரில் வந்தால், இப்பகுதி மக்கள் சேதமடைந்த பேவர் பிளாக் கற்களில் பார்த்து ஓட்டுங்கள் என எச்சரிக்கை செய்து அனுப்புகின்றனர்.தினமலர் நாளிதழின் குடியிருப்போர் குரல் பகுதிக்காக அப்பகுதியில் குடியிருப்போர் சீனிவாசன், கன்னியம்மாள், முத்தாயி, மீனா, ஜெயலட்சுமி பேசியதாவது: குடிநீர் தட்டுப்பாடு
13வது வார்டில் தற்போது மழை காலத்திலும் 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கோடை காலம் என்றால் 10 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வரும். பேரூராட்சி நிர்வாகத்தில் கேட்டால், சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து தினமும் 2.25 லிட்டர் குடிநீர் வினியோகிக்க வேண்டும். ஆனால் குடிநீர் வடிகால் வாரியம் 50 ஆயிரம் லிட்டர் மட்டுமே வழங்குவதால் பற்றாக்குறை என்கின்றனர். மேலும் குடிநீருக்காக கட்டப்பட்ட தொட்டி சேதமடைந்ததால் போர்வெல் நீரை தேக்கி சுகாதாரம் இன்றி பயன்பாட்டில் உள்ளது. பெற்றோரிடம் வாடகை வசூல்
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் தற்போது பலரும் காய்ச்சலால் பாதித்துள்ளனர். சிகிச்சைக்கு இப்பகுதியில் உள்ள துணை சுகாதார நிலையத்திற்கு சென்றால் எப்போதும் பூட்டியே உள்ளது. தினமும் செவிலியர்கள் வருவது இல்லை. துணை சுகாதார நிலையத்தின் சுற்றுச்சுவர் ஒரு பகுதியில் இடிந்து விழுந்து பாதுகாப்பற்ற வகையில் உள்ளது.இங்குள்ள அங்கன்வாடி மையத்திற்கு 50 சிறுவர், சிறுமிகள் சென்று வந்தனர். கட்டடம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால் 4 மாதங்களாக வாடகை கட்டடத்தில் செயல்படுகிறது. இதற்கான வாடகை தொகையை பெற்றோர்களிடம் வசூல் செய்யப்படுகிறது. கொரோனா காலத்தில் இப் பகுதியை ஆய்வு செய்த முந்தைய கலெக்டர் முரளீதரன், சேமதடைந்த அங்கன்வாடி மையம், துணை சுகாதார நிலைய சுற்றுச்சுவரை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டுவதற்கு உத்தரவிட்டு சென்றார். ஆனால் இதுவரை இப் பணி நடக்கவில்லை. வசதி இல்லாத சமுதாய கூடம்
விவசாய தொழிலாளர்கள் அதிகமுள்ள இப் பகுதியில் இங்குள்ள சமுதாய கூடத்தில் நிச்சயதார்த்தம், திருமணம், வளைகாப்பு என விசேஷ வைபவங்கள் நடத்துகின்றோம். ஆனால் இங்கு குடிநீர் தொட்டி, சுகாதார வளாகம் இல்லாததால் சிரமமாக உள்ளது. சாக்கடை தூய்மை இல்லை. இதனால் கொசுக்கடிக்கு பஞ்சமில்லை. இங்குள்ள பெண்கள் சுகாதார வளாகம் முறையான பராமரிப்பு இன்றி சுகாதார கேடு நிலவுகிறது.பட்டா வழங்குவதில் வருவாய் துறை பாரபட்சமின்றி செயல்படுகிறது. பேரூராட்சி நிர்வாகம் இந்த வார்டில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றனர்.--