| ADDED : ஜன 29, 2024 06:29 AM
கம்பம்: வெள்ளைப் பூண்டு விலை 100 சதவீதம் அதிகரித்துள்ளதால், கடந்த மாதம் கிலோ ரூ.180க்கு விற்ற பூண்டு தற்போது கிலோ ரூ.360 முதல் ரூ.400 வரை உயர்ந்துள்ளதால், பொது மக்கள், வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சமையலறையில் இன்றியமையாத பொருளாக இருப்பது வெள்ளைப்பூண்டு. மலைப் பிரதேசங்களில் அதிகம் சாகுபடியாகிறது.இந்தியாவில் மத்தியப்பிரதேசம் முதலிடம் பெறுகிறது. பீகார், ஹரியானா, பஞ்சாப், உத்ரகாண்ட், உத்தரப் பிரதேஷ் உள்ளிட்ட பல மாநிலங்களில் சாகுபடியாகிறது. செப்டம்பர் முதல் நவம்பர் வரை சாகுபடி காலமாகும். தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல், தாண்டிக்குடி உள்ளிட்ட சில பகுதிகளில் சாகுபடியாகிறது. வெள்ளைப்பூண்டின் விலை ஒரே மாதத்தில் 100 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ.180 முதல் 200 வரை விற்பனையான நிலையில் தற்போது கிலோ ரூ.360 முதல் 400 வரை விற்பனையாகிறது.தேனி மாவட்டத்தில் வடுகபட்டியில் மட்டும் வாரம் 2 நாள் வெள்ளைப் பூண்டு மார்க்கெட் உள்ளது. இங்கிருந்து தான் மாவட்டம் முழுவதும் சப்ளையாகிறது.கம்பம் வர்த்தக சங்க தலைவர் முருகன் கூறுகையில், 'கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் 100 சதவீதம் அதிகரித்துள்ளது. காரணம் சீசன் முடிவிற்கு வருகிறது. விளைச்சல் குறைவு என்றும் கூறுகின்றனர்.', என்றார்.இந்த விலை உயர்வால் பொதுமக்கள் மட்டும் இன்றி வியாபாரிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பொது மக்களின் வாங்கும் திறன் குறைய வாய்ப்புள்ளது.