ஐந்து மாவட்டங்களின் ஜீவாதாரமான மூல வைகை ஆறு மாசுபடுகிறது
கடமலைக்குண்டு: வருஷநாடு மூல வைகை ஆறு வழிந்தோடும் கிராமங்களில் இருந்து வரும் குப்பை, கழிவுநீர் ஆற்றில் நேரடியாக கலப்பதால் மூல வைகை ஆறு நாளுக்கு நாள் மாசுபட்டு வருகிறது. ஐந்து மாவட்டங்களின் ஜீவாதாரமாக உள்ள மூல வைகை ஆறு மாசுபடுவது குறித்து பொதுமக்கள், அரசு நிர்வாகங்கள் கவலைப்படவில்லை.மேற்கு தொடர்ச்சி மலை அரசரடி, வெள்ளிமலை பகுதியில் உற்பத்தியாகும் மூலவைகை ஆறு காந்திகிராமம், வாலிப்பாறை வழியாக வருஷநாடு செல்கிறது. உப்புத்துறை யானை கெஜம் பகுதியில் இருந்து வரும் சிற்றாறு தங்கம்மாள்புரம் அருகிலும், சின்னச்சுருளி அருவியில் இருந்து வரும் சிற்றாறு மயிலாடும்பாறை அருகிலும் மூல வைகை ஆற்றில் சேர்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் துவங்கும் ஆறு முருக்கோடை, தும்மக்குண்டு, வருஷநாடு, மயிலாடும்பாறை, தங்கம்மாள்புரம், கடமலைக்குண்டு, துரைச்சாமிபுரம், கண்டமனூர், அம்மச்சியாபுரம், குன்னூர் வழியாக வைகை அணையில் சேர்கிறது.மூல வைகை ஆற்றின் கரைகளில் உள்ள கிராமங்கள் கடந்த பல ஆண்டுகளில் பல மடங்காக விரிவாக்கம் அடைந்துள்ளது. மக்கள் தொகை பெருக்கம், போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. கிராமத்தின் வளர்ச்சிக்கேற்ப அங்கு குவியும் குப்பை, கழிவு நீரின் அளவும் அதிகமாகிறது. மலைக்கிராமங்கள் அனைத்தும் ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. ஊராட்சிகளில் இருந்து வெளியேறும் ஒட்டுமொத்த கழிவு நீரும் நேரடியாக ஆற்றில் கலக்கிறது. ஆற்றின் கரைகளில் கொட்டப்படும் குப்பை பல இடங்களில் ஆற்று நீருடன் சேர்கிறது. மழைக்காலங்களில் ஒரு சில வாரங்கள் மட்டும் ஆற்றில் அதிகப்படியான நீர் வரத்து ஏற்படும்போது குவிந்த குப்பைகள், தேங்கிய கழிவு நீர் ஒட்டுமொத்தமாக தண்ணீருடன் அடித்துச் செல்லப்படும். மற்ற நாட்களில் மூல வைகை ஆறு பல கிராமங்களில் சாக்கடையாகவே உள்ளது. தொடர் விழிப்புணர்வு அவசியம்
மூல வைகை ஆற்றுடன் சேரும் குப்பை கலக்கும் கழிவு நீரால் தண்ணீரின் தன்மை பாதிப்படைகிறது. மணற்பாங்கான பகுதிகளை கடந்து வரும்போது ஓரளவு சுத்தமடையும் நீர், பாறைகள் நிறைந்த பகுதியில் மீண்டும் மாசுபடுகிறது. வைகை ஆற்றில் சேரும் போதும் கழிவுநீராகி செல்கிறது. வைகை ஆற்றின் கரையோரங்களில் உள்ள பொதுமக்கள் ஆறு மாசுபடுவது குறித்து கவலைப்படுவதில்லை. மூல வைகை ஆற்றை பாதுகாக்கும் விழிப்புணர்வும் இவர்களிடம் இல்லை. உள்ளாட்சி நிர்வாகங்களும், சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாட்டு துறையினரும் இது குறித்து அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. மூல வைகை ஆற்றை பாதுகாப்பது குறித்து தொடர்ச்சியான விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே வரும் காலங்களில் வைகை அணையில் சேரும் நீரை தூய்மையாக பாதுகாக்க முடியும். வைகை நீரால் பலன் பெறும் ஐந்து மாவட்ட நிர்வாகங்களும் மூல வைகை ஆற்றை பாதுகாப்பதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் தன்னார்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.