| ADDED : ஜூலை 29, 2011 11:16 PM
தேனி : தேனியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தரமற்றதாகவும், அவற்றை குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும், என அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நகராட்சி கூட்டத்தில் புகார் தெரிவித்தனர். தேனி அல்லிநகரம் நகராட்சி கூட்டம் தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடந்தது. அ.தி.மு.க., கவுன்சிலர் வைகை கருப்பு பேசுகையில், தேனியில் 42.09 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடக்கின்றன. குழாய்கள் தரமற்றவையாக உள்ளன. பல இடங்களில் உடைந்து விழுகின்றன. குழாயில் உள்ளது ஐ.எஸ்.ஐ., முத்திரைதானா என்பதை பரிசோதித்து பார்க்க வேண்டும்.டெண்டரில் கூறப்பட்டுள்ளது போல் பணிகள் நடக்கவில்லை. இதனால் குழாய்கள் எளிதில் சேதமடையும் நிலை உள்ளது. பணிகள் முழுமையாக நடக்கவில்லை.
முறைகேடுகள் நடக்கின்றன. பணிக்காக ஒதுக்கப்பட்ட முதற்கட்ட நிதி 10 கோடியை நிறுத்தி வைக்க வேண்டும். நகராட்சி சார்பில் குழு அமைத்து பணிகளை ஆய்வு செய்த பின் தொடரலாம்ர். இதற்கு வீரமணி, காசிமாயன், மணிகண்டன் உட்பட அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்தனர். காங்.,கவுன்சிலர் கவிதா தரமற்ற பணிகளுக்காக வெளிநடப்பு செய்தார். இதை தொடர்ந்து நிதி ஒதுக்கீட்டை நிறுத்தி வைக்கவும், விசாரணை குழு அமைப்பதாகவும் தலைவர் தெரிவித்தார். தி.மு.க., வெளிநடப்பு: சமச்சீர் கல்வியை தமிழக அரசு அமல்படுத்தாதை கண்டித்து, நகராட்சி துணை தலைவர் இலங்கேஸ்வரன் தலைமையில் தி.மு.க.,கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.