தேனியில் பிரேக் பிடிக்காததால் தோப்பில் இறங்கிய அரசு பஸ் மரத்தில் மோதியதில் மூன்று மாணவிகள் காயம்
தேனி:தேனி தாடிச்சேரி அருகே அரசு டவுன் பஸ் பிரேக் பிடிக்காததால் தென்னந்தோப்பில் இறங்கி மரத்தில் மோதி நின்றது. அதில் பயணித்த பள்ளி மாணவிகள் 3 பேர் காயமடைந்தனர்.ஓடைபட்டியில் இருந்து தேனிக்கு நேற்று காலை அரசு டவுன் பஸ் (டி.என்.57, என். 1264) புறப்பட்டது. தற்காலிக டிரைவர் அல்லிநகரம் சவுந்திரபாண்டியன் 30, ஓட்டினார்.பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என 50 பேர் பயணித்தனர். பஸ் வெங்கடாசலபுரம், தப்புக்குண்டு, தாடிச்சேரி வழியாக நாகலாபுரம் சென்றது. காலை 8:20 மணிக்கு தாடிச்சேரியை கடந்து ஒரு வளைவில் சென்ற போது பஸ் பிரேக் பிடிக்கவில்லை.இதனால் பஸ் ரோட்டில் இருந்து விலகி அருகில் இருந்த தென்னந்தோப்பில் இறங்கியது. அங்கிருந்த ஒரு மரத்தில் மோதி நின்றது. இதனால் பஸ்சில் பயணித்தவர்கள் கூச்சலிட்டனர். இவ் விபத்தில் தேனியில் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவிகள் ரூபா, ஹேமா, நளினி காயமடைந்தனர். இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பஸ்சின் முன்பகுதி கண்ணாடி சேதமடைந்தது. பின்னர் பஸ் மீட்கப்பட்டு வீரபாண்டி போலீஸ் ஸ்டேஷனிற்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து குறித்து விசாரணை நடக்கிறது.தேனி மாவட்டத்தில் அரசு பஸ்கள் போதிய பராமரிப்பின்றி அடிக்கடி நடுவழியில் நிற்பதும், விபத்தில் சிக்குவதும் தொடர்கதையாக உள்ளது.