ஜீப்பின் குறுக்கே பாய்ந்து சென்ற புலி
மூணாறு : மூணாறு அருகே கன்னிமலை எஸ்டேட் டாப் டிவிஷன் செல்லும் ரோட்டில் ஜீப்பின் குறுக்கே புலி பாய்ந்து சென்றதால் பதட்டம் ஏற்பட்டது. மூணாறைச் சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் புலி, சிறுத்தை ஆகியவற்றின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அவற்றை பலர் நேரில் பார்த்துள்ள நிலையில், அவைகளிடம் சிக்கி பசுக்கள் பலியாகுவது வழக்கமாகி விட்டது. இந்நிலையில் மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான கன்னிமலை எஸ்டேட், டாப் டிவிஷனை சேர்ந்தவர் தொழிலாளி சுரேஷ்கோபி. இவர் பகுதி நேரமாக ஜீப் ஓட்டுகிறார். நேற்று முன்தினம் இரவு மூணாறில் சவாரியை முடித்து விட்டு வீட்டை நோக்கி ஜீப்பை தனியாக ஓட்டிச் சென்றார். டாப் டிவிஷன் ரோட்டில் இரவு 8:30 மணிக்கு தேயிலை தோட்ட எண் 11ல் சென்ற போது ஜீப்பின் குறுக்கே புலி பாய்ந்து சென்றது. அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால் முதலில் புலி என கண்டறிய இயலாத நிலையில் புலி என தெரிந்ததும், பதட்டம் அடைந்தார். அந்த ரோட்டில் தினமும் வட மாநில தொழிலாளர்கள் உட்பட ஏராளமானோர் நடமாடி வரும் நிலையில் புலியின் நடமாட்டம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.