| ADDED : பிப் 18, 2024 01:44 AM
தேனி: தேனி பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட மன்றப் போட்டிகளில் முதலிடம் பெற்ற 10 மாணவர்கள் மாநில போட்டிக்கு தேர்வாகினர்.மாவட்ட அளவில் 8 வட்டாரங்களில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் வட்டார அளவிலான தனித்திறன் மேம்பாட்டு போட்டிகளில் முதல் இரு இடங்களை பிடிக்கும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் நேற்று நடந்த மாவட்ட போட்டிகளான இலக்கிய மன்றம், சிறார் திரைப்படம், வினாடி வினா, வானவில் மன்றம் என நான்கு பிரிவுகளில் பங்கேற்றனர். இதில் தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த பேச்சு,கட்டுரை, கவிதை போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்றனர். அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடந்த சிறார் திரைப்படம்' என்ற தலைப்பிலான கதை விமர்சன போட்டி, தனிநபர் நடிப்பு,குறும்படம் தயாரித்தல் போட்டிகளும், என்.ஏ., கொண்டுராஜா உயர்நிலைப்பள்ளியில் நடந்த வினாடிவினா போட்டி, கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வானவில் மன்ற அறிவியல் கண்காட்சி போட்டி, அறிவியல் நாடகம், அறிவியல் செயல்திட்ட போட்டிகளில் பங்கேற்றனர். போட்டிகளை சி.இ.ஓ., இந்திராணி துவங்கி வைத்தார். தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் சங்குமுத்தையா முன்னிலை வகித்தார். போட்டிகளை பள்ளிக்கல்வி துணை ஆய்வாளர் வெங்கடேஷ் ஒருங்கிணைத்தார். உதவி திட்ட அலுவலர்கள் சேதுராமன், மோகன் போட்டிகளை கண்காணித்து துவக்கினர். நடைபெற்ற 10 போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்கள் மாநிலப் போட்டியில் பங்கேற்பர். அத்துடன் வெளிநாடுகளுக்கும் அவர்கள் அழைத்து செல்லப்பட உள்ளனர்' என ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.