வைகை அணை நிரம்பியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
ஆண்டிபட்டி: வைகை அணை நீர்மட்டம் முழு அளவை எட்டியதால் சுற்றுலா வரும் பயணிகளுக்கு பரந்து விரிந்த நீர்த்தேக்கம் மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது. தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் பெய்த மழையால் வைகை அணை நீர்மட்டம் முழு அளவை நெருங்கியுள்ளது. அணை உயரம் 71 அடியாக இருந்தாலும், மழைக்கான சூழல் தொடர்வதால் பாதுகாப்பு கருதி நீர்மட்டம் 69.13 அடியில் நிலை நிறுத்தப்பட்டு, அணைக்கு வரும் நீர் பெரிய, சிறிய மதகுகள் வழியாக வெளியேற்றப் படுகிறது. அணையில் இருந்து வெளியேறும் நீர் அணையின் வலது, இடது கரைகளை இணைக்கும் தரைப் பாலத்தை மூழ்கடித்து செல்வதால் அந்த வழியாக சுற்றுலா பயணிகள் கடந்த மூன்று நாட்களாக அனுமதிக்கப்படவில்லை. அணை நீர்மட்டம் முழு அளவில் இருக்கும்போது நீர்த்தேக்கப்பரப்பு 10 சதுர மைல் பரப்பில் பரந்து விரிந்திருக்கும். தீபாவளி விடுமுறையை முன்னிட்டு அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வைகை அணைக்கு வந்து செல்கின்றனர். பரந்து விரிந்த நீர்த்தேக்கம், அணையின் மேல் மதகுகள் வழியாக நீர் வெளியேற்றம் ஆகியவை தற்போது சுற்றுலா வரும் பயணிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.