| ADDED : பிப் 06, 2024 12:33 AM
பெரியகுளம் : புற்றுநோய் சாதாரண நோய்தான் மன தைரியத்துடன் சிகிச்சை மேற்கொண்டால் குணமடையலாம் என புற்றுநோய் சிகிச்சை நிபுணர் பாரதி பேசினார்.பெரியகுளம் அரசு மாவட்ட மருத்துவமனையில் உலக புற்றுநோய் தினம் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. புற்றுநோய் சிகிச்சை நிபுணர் பாரதி தலைமை வகித்தார். கண்காணிப்பாளர் குமார் முன்னிலை வகித்தார். நிலைய மருத்துவர் ராஜேஷ், டாக்டர்கள் அருண் ஆறுமுகம், திலகவதி, செல்வராஜ், சமூக ஆர்வலர்கள் அன்புக்கரசன் மணி கார்த்திக் பாஸ்கரன் ஜீவானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர். டாக்டர் பாரதி பேசியதாவது: பெரியகுளம் அரசு மாவட்ட மருத்துவமனையில் 63 பேர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னதாக இந்த நோய்க்கு சிகிச்சை பெற்ற 40 பேர் குணமடைந்துள்ளனர். புற்றுநோய் பாதித்தவர்கள் மனக்கவலையை தூக்கி எறியுங்கள். இதுவும் சாதாரண நோய் என எண்ணுங்கள். மருத்துவ குழுவினரான நாங்கள் உங்களை காப்பாற்றுவோம். மன தைரியத்துடன் சிகிச்சை மேற்கொண்டால் புற்றுநோயை குணப்படுத்தலாம். மருத்துவமனையில் புற்றுநோய் உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இந்த நோய் பாதித்தவர்களை வீட்டிலுள்ள உறவுகள் ஒதுக்கி வைக்காமல் அரவணைப்பு செய்யுங்கள். மருத்துவமனையில் மருந்து, மாத்திரை, நவீன சிகிச்சை முறைகள் உள்ளது. நோயாளிகள் சிகிச்சை முறை ரகசியம் காக்கப்படும். தயக்கம் வேண்டாம். உடலில் எந்த பாகத்தில் கட்டிகள் தென்பட்டாலும், சந்தேகப்பட்டாலும் தாமதமின்றி உடனடியாக மருத்துவமனைக்கு வாருங்கள் என்றார். புற்றுநோயினால் குணமடைந்தவர்கள், தற்போது சிகிச்சையில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை விழிப்புணர்வு சிகிச்சை பெற்ற அனுபவங்கள் குறித்து பேசினர்.