பைனான்சியர் கொலை வழக்கில் இருவர் கைது
உத்தமபாளையம், : உத்தமபாளையம் கோர்ட் அருகில் பைனான்சியர் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளி உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.உத்தமபாளையம் பி.டி.ஆர். காலனியை சேர்ந்தவர் தொந்தி மகன் பிரசாந்த் 34, இவர் இப்பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இதே காலனியில் வசிக்கும் அனிஷ் ரகுமான் 42, உடன் முன்விரோதம் இருந்துள்ளது. பல முறை இருவரும் தகராறு செய்துள்ளனர். ஜன. 23 காலை உத்தமபாளையம் கோர்ட் அருகே நின்று கொண்டிருந்த பிரசாந்தை அங்கு வந்த அனீஷ் ரகுமான் ஓட, ஓட விரட்டி கத்தியால் குத்தி கொலை செய்தார். பின்அங்கிருந்து தப்பியோடினார்.உத்தமபாளையம் டி.எஸ்.பி. செங்கோட்டு வேலன் உத்தரவின்பேரில், தனிப்படை போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளின் உதவியுடன் கொலையாளி அனிஷ் ரகுமான் 42, அவரது அக்கா மகன் முத்து 20 ஆகிய இருவரையும் ஆண்டிபட்டியில் பிடித்தனர். பிரசாந்த்தை கொலை செய்யும் இடத்திற்கு அனிஷ் ரகுமானை தனது டூ வீலரில் வைத்து முத்து அழைத்து வந்துள்ளார். கொலை செய்தவுடன் மீண்டும் அதே டூவீலரில் அனிஷ் ரகுமான் சென்றார். சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் செல்ல முத்து உதவியுள்ளார். எனவே கொலைக்கு உதவியதாக முத்துவையும் கைது செய்துள்ளனர்.