உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தமிழக வனத்துறையினர் தாக்கியதாக இருவர் மருத்துவமனையில் அனுமதி

தமிழக வனத்துறையினர் தாக்கியதாக இருவர் மருத்துவமனையில் அனுமதி

மூணாறு : மூணாறு அருகே சிட்டிவாரை எஸ்டேட், என்.சி. டிவிஷனில் கொட்டக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசித்தவர்களை தமிழக வனத்துறையினர் தாக்கியதாக கூறி இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான சிட்டிவாரை எஸ்டேட் என்.சி. டிவிஷனில் போடி ஒன்றியம், கொட்டக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட வனப் பகுதி உள்ளது. அங்கு வனப்பகுதியை ஆக்கிரமித்து, அதில் கூடாரம் அமைத்து சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விட்டதாக சின்னப்பன் மகன் ரவீந்திரனை 35, தேனி உதவி வன பாதுகாப்பு அதிகாரி சிசில் கில்பர்ட் தலைமையில் வனம், போலீஸ், வருவாய் ஆகிய துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் ஜன.23ல் கைது செய்தனர். அங்கிருந்த ஷெட்டையும் அகற்றினர். அச்சம்பவம் தொடர்பாக சின்னப்பன், அவரது இளைய மகன் முருகராஜ், மருமகன் சுரேந்தர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.அனுமதி: ஆக்கிரமிப்பு அகற்றலின் போது தமிழக வனத்துறையினர் தாக்கியதாக சின்னப்பன் மனைவி வசந்தா 60, சுரேந்திரனின் சகோதரர் பழைய மூணாறைச் சேர்ந்த ரவீந்திரகுமார் 40, ஆகியோர் மூணாறில் டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அது குறித்து குரங்கணி போலீசார் விசாரிக்கின்றனர்.ஆக்கிரமிப்பு: கொட்டக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட சுற்றுலா பகுதியான டாப் ஸ்டேஷன், சிட்டிவாரை, எல்லபட்டி எஸ்டேட்டுகள் ஆகிய பகுதிகளில் தமிழக அரசு நிலங்கள் பெரும் அளவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அப்பகுதிகளுக்கு மூணாறு வழியாக செல்ல வேண்டும் என்பதால், தூரத்தை எண்ணி அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்துவதில்லை என்பதால், ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி