உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் வெறிச்சோடிய வைகை அணை பூங்கா

வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் வெறிச்சோடிய வைகை அணை பூங்கா

ஆண்டிபட்டி: கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வைகை அணை பூங்காவிற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து வெறிச்சோடி உள்ளது.தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா இடமாக வைகை அணை மற்றும் பூங்கா உள்ளது. 10 சதுர மைல் பரப்பில் பரந்து விரிந்த நீர் தேக்கம், அணையின் வலது இடது கரைகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட பூங்காக்கள், மாதிரி அணை, மாதிரி ரயில் ஆகியவை சுற்றுலா பயணிகள் ரசித்துச் செல்லும் முக்கிய இடங்களாக உள்ளன. கேரளா, கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் வைகை அணை மற்றும் பூங்காக்களையும் சுற்றி பார்த்துச்செல்வர். கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து பெய்த கோடை மழையால் தற்போது வைகை அணை பூங்காவில் பசுமை படர்ந்து மரம், செடி, கொடிகள் குளுமையாக உள்ளன. இருப்பினும் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. இதனால் வைகை அணைக்கு சுற்றுலா வரும் பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.வைகை அணை நீர்வளத் துறையினர் கூறியதாவது: அடுத்தடுத்து கோடை மழை பெய்தாலும் வைகை அணைக்கு நீர்வரத்து ஏதுமில்லை. தற்போதுள்ள சூழலில் அணையில் இருந்து நீர் திறப்பும் இல்லை. மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்கு மட்டும் அணையிலிருந்து வினாடிக்கு 72 கனஅடி நீர் வெளியேறுகிறது. வெயிலின் தாக்கத்தால் வைகை அணை மற்றும் பூங்காக்களை சுற்றி பார்க்க பலரும் விரும்புவதில்லை. பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை இன்னும் முழுமையாக துவங்கவில்லை. வெயிலின் தாக்கம் குறைந்தால் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி