குமுளியில் வாகன சோதனை
கூடலுார்: கேரளாவில் இருந்து மருத்துவ, பாலிதீன் கழிவுகள், குப்பையை தமிழக எல்லையில் கொட்டுவது தொடர்ந்துள்ளது. தமிழக கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடங்களில் குமுளி மலைப்பாதையும் ஒன்றாகும். சபரிமலை சீசனில் பக்தர்களின் வாகனம் அதிகமாக இப்பாதையில் செல்கின்றன. லோயர்கேம்பில் இருந்து குமுளி வரையுள்ள 6 கி.மீ., தூர மலைப்பாதையின் இரு பகுதிகளிலும் பாலிதீன், குப்பை கழிவுகள் அதிகம் கொட்டப்படுகிறது. தமிழகப் பகுதியில் இருந்து கேரளாவிற்கு காய்கறி ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அங்குள்ள கழிவுகளை மீண்டும் தமிழக பகுதியில் கொட்டுவதையும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.இதனை தடுப்பதற்காக நேற்று எல்லைப் பகுதியான குமுளியில் கேரளாவில் இருந்து தமிழகப் பகுதிக்கு வரும் அனைத்து வாகனங்களையும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் விஸ்வநாதன், கூடலுார் நகராட்சி சுகாதார ஆய்வாளர் விவேக் தலைமையில் சோதனை மேற்கொண்டனர். கழிவுகளை கொண்டு வந்தால் கூடுதலான அபராதத் தொகை விதிக்கப்படும் என டிரைவர்களிடம் எச்சரித்து அனுப்பினர். இந்த சோதனை பெயரளவிற்கு இல்லாமல் அடிக்கடி நடத்த வேண்டும் என தன்னார்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.