உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வடிகால் வசதியின்றி வீடுகளுக்கு முன் தேங்கும் கழிவு நீர்; போடி நகராட்சி 18 வது வார்டு வ.உ.சி., நகர் குடியிருப்போர் குமுறல்

வடிகால் வசதியின்றி வீடுகளுக்கு முன் தேங்கும் கழிவு நீர்; போடி நகராட்சி 18 வது வார்டு வ.உ.சி., நகர் குடியிருப்போர் குமுறல்

போடி; போடி நகராட்சி 18 வது வார்டு வ.உ.சி., நகர் தெற்கு தெருவில் ரோடு, சாக்கடை வசதி இன்றி வீடுகளுக்கு முன் கழிவு நீர் குளம்போல் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுவதாக குடியிருப்போர் புலம்புகின்றனர். இந்த வார்டில் இஸ்ரேல் சந்து, சர்ச்தெரு, வ.உ.சி., நகர் நடுத்தெரு, தெற்கு தெரு, வடக்கு தெரு, வேதமுத்து சந்து, தியாகி விஸ்வநாதன் தெரு, செபஸ்தியார் கோயில் தெரு, காளியம்மன் கோயில் தெற்கு சந்து உள்ளிட்ட தெருக்களில் 700 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். வ.உ.சி., நகர் தெற்கு தெரு குடியிருப்போர் செல்வக்குமார், பிரசாத், முத்துப்பாண்டி, முனீஸ்வரன் ஆகியோர் குடியிருப்போர் குரல் பகுதிக்காக பேசியதாவது : பாதாள சாக்கடை இன்றி சிரமம் காளியம்மன்கோயில் தெற்கு சந்து, கருப்பண்ணன் சந்து பகுதியில் இது வரை பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெறவில்லை. வ.உ.சி., நகர் தெற்கு தெருவில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்தும் இணைப்பு வழங்கவில்லை. குடிநீர் பைப் லைன் அமைத்தும் குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் நீண்ட தூரம் நடந்து சென்று குடிநீர் பிடித்து வரும் நிலை உள்ளது. முடியாத சிலர் குடிநீரை விலைக்கு வாங்கி பருகுகின்றனர். ரோடு வசதி தேவை போடி தேனி செல்லும் மெயின் ரோட்டில் இருந்து வரும் கழிவு நீர் செல்ல வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீருடன் பாலிதீன் குப்பை சேர்ந்து தியாகி விஸ்வநாதன் தெரு, வ.உ.சி.,தெற்கு தெரு, வடக்குத் தெருக்களில் குடியிருப்புகளுக்கு அருகே குளம் போல் தேங்கி உள்ளது. இதில் முட்செடிகள் வளர்ந்து விஷப் பூச்சிகள் வீட்டிற்கு வருவதால் அச்சத்துடன் வசிக்கிறோம். தேங்கிய நீரால் கொசுத் தொல்லை அதிகம் உள்ளது. சாக்கடை வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் தேங்குகிறது. தெரு மண் பாதையாக உள்ளதால் மழைக் காலங்களில் சகதிகடாக மாறி நடந்து கூட செல்ல முடியவில்லை. தெருவிளக்கு இன்றி இருளில் மூழ்கி உள்ளது. சாலைக் காளியம்மன் கோயில் - திருமலாபுரம் செல்லும் ரோட்டில் நீர்வரத்து ஓடை துார்வாராததால் பாலிதீன் குப்பைதேங்கியுள்ளது. தடுப்புச்சுவர் இன்றிவிபத்து அபாயம் சாலைக் காளியம்மன் கோயில் ரோட்டில் இருந்து வ.உ.சி., நகர் நுழைவு பாதையில் உள்ள சிறு பாலத்தில் ஒருபுறம் தடுப்புச்சுவர் இல்லாததால் இரவில் வாகனங்கள் வேகமாக வரும் போது தடுப்புச் சுவர் இல்லாமல் இருப்பது தெரியாமல் தடுமாறி சாக்கடைக்குள் விழும் அபாயம் உள்ளது. தடுப்பு சுவர் அமைக்க கோரி நகராட்சியில் பலமுறை முறையிட்டும் பலன் இல்லை. வீடுகளுக்கு பட்டா இன்றி தவிப்பு தியாகி விஸ்வநாதன் தெரு கிழக்கு பகுதியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் 32 குடும்பங்களில் 18 நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 14 குடும்பங்களுக்கு இதுவரை பட்டா கிடைக்காததால் குடிநீர், மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி இன்றி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். பட்டா வழங்க வேண்டும். வீடுகளுக்கு அருகே தேங்கிய கழிவு நீரை அகற்றி மாற்று பாதையில் வடிகால் வசதியும், ரோடு, சாக்கடை, தெருவிளக்கு அமைத்து தர நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை