முல்லைப்பெரியாறு அணையில் நீர் திறப்பு மீண்டும் அதிகரிப்பு
கூடலுார்: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு 400 கன அடியாக குறைக்கப்பட்ட நீர் திறப்பு, மீண்டும் 1822 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் தடைபட்டிருந்த மின் உற்பத்தி மீண்டும் துவங்கியது. முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் மழை குறைந்ததால் தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு நவ., 2ல் 1822 கன அடியில் இருந்து 400 கன அடியாக குறைக்கப்பட்டது. இத்தண்ணீர் மூலம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் 36 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய வாய்ப்பு இருந்தும் உற்பத்தி செய்யவில்லை. நேற்று காலை 6:00 மணியிலிருந்து மீண்டும் தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு 1822 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் லோயர்கேம்ப் பெரியாறு மின் நிலையத்தில் 4 ஜெனரேட்டர்களில் 162 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் துவங்கியது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 551 கன அடியாக இருந்தது. அணை நீர்ப் பிடிப்பில் மழை பதிவாகவில்லை. நீர் இருப்பு 6470 மில்லியன் கன அடியாகும். நீர்மட்டம் 137.40 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி).