முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பு காலையில் குறைப்பு, மாலையில் அதிகரிப்பு
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு நேற்று காலையில் குறைக்கப்பட்ட நீர்திறப்பு மாலையில் மீண்டும் அதிகரிக்கப்பட்டது.முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழை குறைந்து நீர்மட்டமும் வெகுவாகக் குறைந்து வந்தது. நேற்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 129.80 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). இந்நிலையில் அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்டிருந்த வினாடிக்கு 1867 கன அடி நீர் நேற்று காலையில் 105 கன அடியாக குறைக்கப்பட்டது. இதனால் லோயர்கேம்பில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. முல்லைப் பெரியாற்றின் கரைப்பகுதியில் சீரமைப்பு பணி நடந்ததால் நீர் திறப்பு குறைத்ததாக தெரிவிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து மாலையில் மீண்டும் நீர் திறப்பு 1867 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 921 கன அடியாக இருந்தது. பெரியாறில் 5.2 மி.மீ., தேக்கடியில் 7.4 மி.மீ., மழை பதிவானது. நீர் இருப்பு 4654 மில்லியன் கன அடியாகும்.நீர்திறப்பால் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் 4 ஜெனரேட்டர்களில் முழு அளவான 168 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.